பிரிட்டானியா நிறுவனம் தயாரித்த பிஸ்கட் பாக்கெட்டுகளின் எடை மிகவும் குறைவாக இருந்ததை அடுத்து அந்நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம்

கேரள மாநிலம் வரக்கரா-வைச் சேர்ந்த ஜார்ஜ் தட்டில் என்பவர் 2019 டிசம்பர் 4ம் தேதி வரக்கராவில் உள்ள சக்கிரி ராயல் பேக்கரி என்ற கடையில் 2 பாக்கெட் ‘பிரிட்டானியா நியூட்ரி சாய்ஸ் தின் அரோ ரூட் பிஸ்கட்’ வாங்கியுள்ளார்.

இந்த பாக்கெட்டுகளின் மீது 300 கிராம் எடை கொண்டது என்று போடப்பட்டிருந்த நிலையில் இதன் எடை குறைவாக இருப்பதை உணர்ந்த அவர் அதனை எடை போட்டு பார்த்துள்ளார் அதில் ஒரு பாக்கெட் 269 கிராம் மற்றொரு பாக்கெட் 249 கிராம் மட்டுமே இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், இதுகுறித்து சட்ட அலுவலகத்தில் புகார் அளித்த அவர் இந்த பிஸ்கட் பாக்கெட்டுகளின் எடை குறைவாக இருந்ததை சட்ட அலுவலகம் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டார்.

பிரிட்டானியா நிறுவனம் இதுபோன்ற எடை குறைவான பாக்கெட்டுகளை விற்பனை செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றி மோசடியாக அந்நிறுவனம் லாபம் ஈட்டி வருவதாக நுகர்வோர் மன்றத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் மீதான வழக்கில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தீர்ப்பளித்த திருச்சூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், பிரிட்டானியா மற்றும் சக்கிரி ராயல் பேக்கரி ஆகியோர் ஜார்ஜ் தட்டிலுக்கு ரூ. 60000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

52 கிராம் எடை குறைவாக பிஸ்கட் பாக்கெட்டுகளை விற்பனை செய்த பிரிட்டானியா நிறுவனம் மீது அபராதம் விதித்து வெளியாகியுள்ள இந்த தீர்ப்பில் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்க, பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களின் நிகர அளவை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குமாறு கேரள சட்ட அளவியல் கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.