லண்டன்: பிரிட்டன் இளவரசர் சார்லசும், அவரது துணைவி கெமில்லாவும் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக்கொண்டனர்.

உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கினாலும், முதல் முறையாக கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு போட பிரிட்டன் அரசு அனுமதி அளித்தது.

பைசர், ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட தடுப்பூசிகள் பிரிட்டனில் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இளவரசர் சார்லசும், அவரது துணைவி கெமில்லாவும் இன்று முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: இளவரசர் சார்லசும், கார்ன்வால் டச்சசும் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் முதல் முதலாக பரவத் தொடங்கிய காலத்தில் கடந்த ஆண்டு மார்ச்சில் இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாக சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். பிரிட்டனில் இதுவரை 1.3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.