லண்டன்: பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள இளவரசர் ஹாரியை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய பட்டத்து இளவரசர் சார்லஸ் மற்றும் மறைந்த டயானா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் ஹாரி. இவரின் உடன்பிறந்த அண்ணன் இளவரசர் வில்லியம்.
முன்னாள் அமெரிக்க நடிகையும் தனது 38 வயது மனைவியுமான மேகனுடன் குடும்பம் நடத்திவரும் 35 வயதான ஹாரி, பிரிட்டன் அரசக் குடும்பத்திலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்து பிரிட்டன் அரச குடும்ப வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இவருக்கு 8 மாத குழந்தை உள்ளது. இவர் எதிர்காலத்தில் பிரிட்டன் மற்றும் கனடாவில் மாறிமாறி வசிக்கப்போவதாகவும் அறிவித்தார் மற்றும் தற்போது அரசக் குடும்பத்திலிருந்து விலகுவதற்கான முறைப்படியான சம்பிரதாயங்களை மேற்கொண்டு வருகிறார்.
ஆனால், இவரின் முடிவை திரும்பப்பெறும் வகையில், அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் சிலர் இவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.