லண்டன்: பிரிட்டனில் படிக்கும் அனைத்து வெளிநாட்டு மாணாக்கர்களும், படிப்பு முடிந்த பின்னர், அங்கேயே 2 ஆண்டுகள் வரை தங்கி பணிபுரிவதற்கான விசா வழங்கப்படும் என்ற சலுகையை பிரிட்டன் அரசு மீண்டும் கொண்டுவந்துள்ளது.
வெளிநாட்டு மாணாக்கர்களுக்கு படிப்பு முடிந்ததும் 2 ஆண்டுகள் வரை விசா வழங்கும் நடைமுறை பிரிட்டனில் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டன் பிரதமராக தெரசா மே பொறுப்பேற்ற பின்னர் இந்த நடைமுறையில் மாற்றம் செய்தார்.
அதன்படி, வெளிநாட்டு மாணாக்கர்களின் படிப்பு முடிந்த பின்னர் மொத்தம் 4 மாதங்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என்ற நடைமுறை உருவானது. இதனால், பிரிட்டனை நோக்கிவரும் வெளிநாட்டு மாணாக்கர்களின் எண்ணிக்கை குறைந்தது.
எனவே, நிலைமையை மீண்டும் சீராக்க, தற்போது பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள போரிஸ் ஜான்ஸன் பழைய நடைமுறையை மீண்டும் கொண்டுவருவது என்று முடிவுசெய்தார். அதன்படி, அவரின் அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால், பல வெளிநாட்டு மாணாக்கர்கள், குறிப்பாக இந்திய மாணாக்கர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த முடிவை அந்நாட்டின் பல பல்கலைகள் மற்றும் கல்லூரிகள் வரவேற்றுள்ளன.