லண்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பணிசெய்ய இயலாத ஊழியர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 80% வரை வழங்குவதற்கு முடிவெடுத்துள்ளது பிரிட்டன் அரசாங்கம்.

இதன்மூலம், ஒரு பணியாளர் மாதத்திற்கு 2500 பவுண்டுகள் வரை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இது பிரிட்டன் வருமான சராசரிக்கு சற்றே கூடுதலானது.

அரசின் இந்த முன்னுதாரணமற்ற முடிவானது, அந்நாட்டின் பல லட்சக்கணக்கான பணியாளர்களுடைய ஊதியங்களின் விகிதத்திற்கு அரசு உத்தரவாதமளிப்பதாய் உள்ளது.

இப்போதைக்கு இத்திட்டம் 3மாத கால அளவிற்கு துவக்கப்பட்டுள்ளது. பின்னர், தேவையென்றால் அதற்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், வாடகைதாரர்கள், சுயதொழில்புரிவோருக்கான வரிச் சலுகை உள்ளிட்டோரின் நலனிற்காக ஏற்கனவே 1 பில்லியன் பவுண்டுகள் அறிவிக்கப்பட்டது.

அந்நாட்டின் பப்புகள், பார்கள், ரெஸ்டாரன்ட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவை கொரோனா பரவலால் மூடப்பட்டது. இந்தப் பொருளாதார நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கான மேற்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.