பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில், 239 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது இந்திய அணி.

தனது முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் எடுத்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 62 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அதேசமயம், இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை துவக்கிய இந்திய அணி, தனது விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்துவந்தது. முக்கிய பேட்ஸ்மென்களான ரஹானே, புஜாரா, மயங்க் அகர்வால் மற்றும் ரிஷப் பன்ட் என யாரு‍மே அரைசதம் அடிக்கவில்லை.

தற்போது, வாஷிங்டன் சுந்தரும், ஷர்துல் தாகுரும் களத்தில் உள்ளனர். சுந்தர் 35 ரன்களையும், ஷர்துல் 23 ரன்களையும் எடுத்துள்ளனர்.

தற்போதைய நிலையில், இந்திய அணி, ஆஸ்திரேலியாவைவிட மொத்தம் 130 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஏதேனும் 2 முக்கிய பேட்ஸ்மென்கள் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்ற நிலையில், அனைவருமே சொதப்பியுள்ளனர்.

இந்திய அணியின் வசம் அனுபவமற்ற புதிய பெளலர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பேட்ஸ்மென்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் ஏமாற்றியுள்ளனர்.