இஸ்லாமாபாத்,
பிரிக்ஸ் மாநாடு மோடியால் தவறாக வழி நடத்தப்படுகிறது என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது .
கோவாவில் கடந்த 2 நாட்களாக பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “நமது பொருளாதாரத்துக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதத்தின் தாய்மடியாக இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் குரல் கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதற்கு, பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. பிரிக்ஸ் மாநாட்டை மோடி தவறாக வழிநடத்தி செல்வதாக உடனடியாக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறிய தாவது.
இந்தியா, பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகளை தவறாக வழிநடத்துகிறது. இந்தியாவின் தலைமை, ஜம்மு-காஷ்மீரில் மேற்கொண்டு வரும் பண்பற்ற தன்மையை தீவிரமாக மறைக்க முயற்சிக்கிறது.
காஷ்மீரில் உண்மை அறியும் குழுவை அனுப்ப ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையர் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கவுரை ஆற்றினார். அபபோது அவர் கூறியதாவது.
நமது பொருளாதாரத்துக்கு நேரடி அச்சுறுத்தலாக தீவிரவாதம் இருந்துவரும் நிலையில் இந்தியாவின் ஒரு அண்டைநாடு (பாகிஸ்தான்) தீவிரவாதத்தின் தாய்மடியாக விளங்கி வருவது கவலைக்குரியதாக உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தீவிரவாத அமைப்புகள் இந்த தாய்மடியுடன் தொடர்புடையதாக உள்ளன. இந்த அச்சுறுத்தலை எதிர்த்து பிரிக்ஸ் நாடுகள் குரல் எழுப்ப வேண்டும்.
இவ்வாறு பேசினார்.