மணமகள்(ன்) தேவை – சிறுகதை

Must read

 

மணமகள்(ன்) தேவை

சிறுகதை

பா. தேவிமயில் குமார்

 

“நிரந்தரி, உன்னை நான் உடனேப்  பார்க்கணும் எப்ப வர ?”

“என்னால் வரமுடியாது…”

“சரி அப்படின்னா, நமக்கு இடையிலான காதலை உன் அப்பா, அம்மா, தங்கையிடம் சொல்லட்டுமா ?”

“சரி, வந்து ஒழியறேன், என்  தலை விதி” என செல் போனைத் துண்டித்தாள்

லங்கேஷ்வரனும், நிரந்தரியும் கடந்த மூன்று வருடங்களாக காதலர்கள், சேலத்தில் ஒரே நகரைச் சேர்ந்தவர்கள். ஏனோ லங்கேஷின் மீது ஒரு ஆறு மாதமாகக் கோபம் கொண்டு நிரந்தரி அவனைத் தவிர்த்தாள்.

சேலத்தின் புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள ஒரு பிரபலமான சிற்றுண்டி கடையில் லங்கேஷ், காத்திருந்தான், சிறிது நேரம் கழித்து நிரந்தரி  வந்து சேர்ந்தாள்.

“வா, நிரந்தரி”

“ஏன்  என்ன கோபம் என்மேல் ?”

“சொன்னால்தானே தெரியும் “

“நீங்கள் இப்போது அரசின் உயர் பதவிக்கு தேர்வெழுதி, வேலையில் சேரப் போகிறீர்கள், அதுதான் பிரச்சினை “

“சரி, நான் வேலையில் சேருவதற்கும், நம் காதலுக்கும் என்ன சம்பந்தம் ?”

“அதிலும் என்னுடைய வேலை மிக உயர்ந்த பதவி, நாளை நம் வாழ்க்கைக்கு நல்லது தானே ? இதிலென்ன ?”

“இங்க பாருங்க லங்கா, நான் ஒரு நடந்த விசயத்தை  சொல்றேன் அதுக்கப்புறம் முடிவு பண்ணுங்க.”

என் அம்மா வழியில் நெருங்கிய உறவினர் ஒருவர் உங்களைப்  போல பெரும் பதவியில் இருந்தார், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து வைத்துள்ளார்.

அவருக்கு மூன்று மகன்கள் ஒரு மகள், மூன்று மகன்களில் ஒருவர் மட்டுமே படித்து நல்லமுறையில் உள்ளார்.

மற்ற இருவரும் தந்தையின் சொத்தை குடி, சூதாட்டம், பெண்கள் என சீரழித்துக் கொண்டிருக்கின்றனர், அவர்களின் அட்டகாசம் தாங்காமல் இருவரின் மனைவி, குழந்தைகள் என அனைவரும் அந்த வீட்டை விட்டு சென்றுவிட்டனர். பெண்ணின் வாழ்க்கையும், சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதனால் எங்கள் உறவுக்காரர்கள் எல்லோரும் “வந்த வழியே சொத்தானது, இப்போது சொத்தாகி” விட்டது எனக் கூறுகிறார்கள்.

“சரி, இப்போது அதற்கும் இதற்கும் என்ன முடிச்சு போடுற ?” என்றான்.

ஆமாம் லங்கா, அவர்களில் கொஞ்சம் நல்ல நிலையில் இருக்கும் மூன்றாவது பையனுக்கு என்னைப் பெண்கேட்டு வந்தார்கள் என் அப்பாவோ, லஞ்சத்தில் வாழ்ந்த குடும்பம் கண்டிப்பாக அதன் பலன் பின் வாழ்க்கையில் தான் காண்பிக்கும், எனவே கண்டிப்பாக பெண்தர முடியாது எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார்.

“இட்டார்க்கு இட்ட பலன்” எனவும் ஏதோ ஒரு பழமொழியைக் கூறினார் அப்பா

அதனாலக் கண்டிப்பாக நீங்க எவ்வளவுப் பெரிய பதவியில் இருந்தாலும் என் அப்பா, உங்களுக்கு சம்மதம் சொல்ல மாட்டார், அதனால் தான், எப்படியும் இந்தக் கல்யாணம் நடக்காதுன்றதால தான் உங்ககிட்ட நான் பேசுவதைத் தவிர்த்தேன், போதுமா ? என்றாள்.

“சரி, ஓடிரலாம் வர்றியா ?”

“ம்…. அதுக்கு வேற ஆளைப் பாருங்க”

“சரி, இப்ப நான் பேசட்டுமா ?”

“ம்ம்…” என்றாள் நிரந்தரி.

இந்த காலத்தில் அரசுப்பணியில் இருந்தால் வரன் சீக்கிரம் அமைந்து விடும், ஆனால் உங்க அப்பா வித்தியாசமானவர் தான், இது எனக்கு நல்லது தான்.

நல்லா, யோசித்துப்பாரு வீட்டில் மனைவியோ, அல்லது கணவனோ அரசுப்பணியில் இருந்தால், அவர்களிடம் வரவுக்கு அதிகமாக எதிர்பார்க்கக்கூடாது நிலம் வேண்டும், மனை வேண்டும், வீடு, கார், வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம்னு கேட்டு நச்சரிக்கக்கூடாது.

அப்புறம் சம்பளத்தை மட்டும் தான் வாங்குவேன், லஞ்சப் பணத்தை வாங்க மாட்டேன் என்று உன் உறவினரின் மனைவியும், குழந்தைகளும் ஆரம்பத்திலேயேக் கூறியிருந்தால் அவர் ஏன் வாங்கப் போகிறார் ? சொத்து சேர்க்கப்போகிறார் ?

தவறு அரசு ஊழியருடையது மட்டுமல்ல, லஞ்சம் கொடுப்பவர் மற்றும் அதை வாங்கி சுகபோக வாழ்க்கை நடத்தும் அவருடைய குடும்பத்தினருடையதும் தான், என் பார்வை சரியா ? என்றான்

சரி தான், என்றாள் நிரந்தரி தலையை ஆட்டியபடி

அப்ப, நீ என் சம்பளப்பணத்தில் மட்டும் குடும்பம் நடத்திடு, நான் லஞ்சம் வாங்காமல்  நேர்மையாக வேலை பார்ப்பேன்,  லஞ்சத்தை விட எனக்கு நேர்மையாக இருப்பதால் கிடைக்கும் மரியாதை தான் என் உண்மையான சந்தோஷம், உனக்கும் அது தான் மரியாதை என்றான்.

“என்னை நம்பு, நான் உனக்கேற்ற கணவனாக நேர்மையாக இருப்பேன் சரியா ?” என்றான்

“சாரி லங்கேஷ், இப்போது வரும் செய்திகளில் இந்த துறை, அதிகாரி கைது அந்த துறை அதிகாரி கைது வருவதைப் பார்த்து பயந்து விட்டேன். எப்படி ஒரு அவமானம் ? அப்பப்பா !”

“எல்லோரும் அப்படியல்ல, உன்னைப் போல மனைவி, நல்ல பெற்றோர் கிடைத்தவர்கள், நேர்மையை மதிப்பவர்கள், என நிறைய அதிகாரிகள் மிக மிக நேர்மையாக இருக்கிறார்கள் தெரியுமா ? நிரந்தரி” என்றான்.

“ம்…தெரியும், இருந்தாலும் ஒரு பயம், அப்புறம் அப்பா ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதால் தான் உங்களை விட்டு விலகிச் சென்றேன். நான் என்ன செய்ய ?”

“மணமகள் தேவை விளம்பரம், எங்க அம்மா இன்னிக்குக் கொடுக்கறேன்னு சொன்னாங்க நிரந்தரி, என்ன கொடுத்துவிடச் சொல்லவா ?” என்றுக்கூறி  சிரித்தான்.

“ஓ.. அப்படியா ?  அப்ப எனக்கும் மணமகன் தேவைன்னு என் பெயரில் விளம்பரம் கொடுக்கலாமே ?” என முறைத்தாள்.

சரி, என்னைக்குப் பெண் பார்க்க வருகிறீர்கள் ? அப்பாவிடம் உங்களைப்பற்றி நான் பேச வேண்டும் லங்கேஷ்

நான் பெண்ணெல்லாம் பார்க்க வரமாட்டேன், ஏன்னா ஒரு வாரத்திற்கு முன்னே உன் வீட்டில் உள்ள அனைவரிடமும் நான் பேசி சம்மதம் வாங்கிட்டேன், உன் அப்பா என்னை நேர்மையாக நடக்க சொல்லி சத்தியம் வாங்கிட்டார் என்றான். உண்மையிலேயே என் மாமனார் ஒரு “சூப்பர் ஸ்டார்” என்று

அட.. அப்ப நான் தான் லேட்டா ? எனக் கூறி புன்னகைத்தான்.

வெளியே மெல்லிய மழைத்தூறல் தூறியது, அவர்கள் தேநீர் அருந்திக் கொண்டே, மழையை ரசித்துக் கொண்டே எதிர்கால கனவுகளை குறித்து பேசினார்கள்.

குறள்

 

சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்

கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று

 

பொருள் : தீய செயல்களால் பொருளைச்  சேர்த்துக் காப்பாற்றுதல் பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை நிரப்பி அதனைக் காப்பாற்றுவது போன்றதாகும்.

More articles

Latest article