பனாஜி,
கோவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில், இந்திய பிரதமர் மோடிக்கும், ரஷிய அதிபர் புதினுக்கும் இடையில் 16 ஒப்பந்தங்களை கையெழுத்தானது.
கோவா தலைநகர் பனாஜியில் இந்தியா, ரஷியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அடங்கிய இரண்டு நாள் ‘பிரிக்ஸ்’ மாநாடு நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று பிரிக்ஸ் நாடுகளுடன் வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம் இலங்கை, தாய்லாந்து நாடுகள் அடங்கிய பிம்ஸ்டெக் அமைப்பு மாநாடும் நாளை பிரிக்ஸ் மாநாடும் நடக்கிறது.
இதில் கலந்து கொள்வதற்காக அனைத்து நாட்டு தலைவர்களும் கோவா வந்துள்ளனர்.
முதலில் ரஷிய அதிபர் புதின் பனாஜி வந்தார். அவரை பிரதமர் மோடி வரவேற்றார். தொடர்ந்து அவருடன் இந்தியா- ரஷியா இடையேயான பல்வேறு தொழில்- வர்த்தக உடன் படிக்கைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அதன் பிறகு உணவு, பாதுகாப்பு, ரெயில்வே உள்ளிட்ட துறைகள் தொடர்பாக 16 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இதில் ரூ.39,000 கோடி மதிப்பிலான அதிநவீன ஏவுகணை வாங்கும் ஒப்பந்தமும் அடங்கும். இந்தியா – ரஷ்யா இணைந்து 200 கமோவ் ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் ஒப்பந்தமும் இன்று கையெழுத்தானது.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ‘இந்தியா -ரஷ்யா இடையே மிகச்சிறந்த நட்புறவு நீடிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைக்கு ரஷ்யா ஆதரவு அளிப்பதற்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவும் ரஷ்யாவும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கின்றன’ என்றார்.