குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றம் நிரூபிக்கப்படாத வரையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள் என்று அமெரிக்க நீதித்துறை கூறியதை சுட்டிக்காட்டிய அதானி குழுமம் அதானி குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க தேவையான அனைத்து வழிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது.

அதானி நிறுவன தலைவர் கவுதம் அதானி அவரது மருமகன் சாகர் அதானி தவிர மேலும் 6 பேர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் ரூ. 2,029 கோடி லஞ்சம் மற்றும் பத்திர மோசடி தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதானி நிறுவன செய்தி தொடர்பாளர் அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையங்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களை ஏமாற்றி 3 பில்லியன் டாலர்களுக்கு மேல் கடன்கள் மற்றும் பத்திரங்களைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு லஞ்ச திட்டத்தை மறைத்து, நிதி வெளிப்பாடுகளில் ஊழல்-எதிர்ப்பு நடைமுறைகள் பற்றி தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வசதியாக இந்திய அதிகாரிகளை அதானி பல முறை நேரில் சந்தித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவருடன் இணைந்து அந்நிறுவனத்தைச் சேர்ந்த மற்றவர்களும் இந்த சதியில் ஈடுபட்டுள்ளனர், அவர்கள் அமெரிக்காவில் இருந்த காலத்தில் நேரிலும் மின்னணு செய்தியிடல் செயலி மூலமாகவும் லஞ்சம் வாங்கும் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர்.

இந்த திட்டம் தொடர்பான இ-மெயில் மற்றும் வாட்ஸப் உள்ளிட்ட ஆவணங்களை இவர்கள் அழித்ததாகவும் இதன்மூலம் மோசடி தொடர்பான ஆதாரங்களை அழித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் எதிரொலி… அதானியை கைது செய்ய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை…