புதுடெல்லி: நமோ தொலைக்காட்சி என்ற பெயருடைய சேனல், அரசு விதிமுறைகளையும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளையும் மீறியுள்ளது என்ற குற்றசாட்டு பலமாக எழுந்துள்ளது.
இதுகுறித்து கூறப்படுவதாவது; பிரதமர் மோடி மற்றும் பாரதீய ஜனதா மூத்த தலைவர்களின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பு செய்யும் வகையில், நமோ தொலைக்காட்சி எனும் பெயர்கொண்ட, ஒரு சேனல் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கப்பட்டது.
இந்த சேனல், அனுமதிக்கப்பட்ட தனியார் சேட்டிலைட் தொலைக்காட்சி சேனல்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கவில்லை என மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒலிபரப்பு உரிமத்திற்காக, நமோ சேனல் சார்பாக விண்ணப்பம் செய்யப்படவில்லை எனவும் அமைச்சகம் சார்பில் தெரிவிக்கின்றனர்.
அமைச்சக பட்டியலில் இல்லாததால், அந்த சேனலின் உரிமையாளர்கள் யார் என்பது குறித்தும், அவர்கள் பாதுகாப்பு குறித்த தடையில்லா சான்றுகளைப் பெற்றுள்ளார்களா? என்பது பற்றியும் விபரங்கள் இல்லை.
இந்த சேனல் குறித்து, முதலில் கருத்து தெரிவித்த டாடா ஸ்கை, இதை ஒரு ‘இந்தி மொழி செய்திச் சேனல்’ எனக் கூறியிருந்தது. ஆனால், பின்னர், இது செய்திச் சேனல் இல்லையென்றும், சிறப்பு சேவைகளுக்கான சேனல் மட்டுமே என்றும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு சேவைகளுக்கான சேனல் என்றால், அது ஏதேனுமொரு குறிப்பிட்ட பிரிவின் கீழ் (நடனம், இசை மற்றும் பக்தி) வகைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இப்படி எதுவுமே இல்லாமல், பல்வேறான டிடிஎச் சேவை வழங்குநர்களின் பட்டியலில் இந்த சேனல் இடம்பெற்றது எப்படி? என்ற கேள்வி எழுகிறது.
இந்த சேனலுக்கான ஆதரவு, பாரதீய ஜனதா கட்சியிடமிருந்தே பெறப்படுவதாக, டாடா ஸ்கை முதன்மை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் உண்மையென்றால், இது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் பிரச்சார சேனல் என்றாகிறது. அப்படியானால், இதை அப்பட்டமான தேர்தல் நன்னடத்தை விதி மீறல் என்றே கொள்ள வேண்டும்.
ஆனால், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ள மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், “நமோ தொலைக்காட்சி என்பது, டிடிஎச் சேவையாளர்களால் தொடங்கப்பட்டுள்ள ஒரு விளம்பர தளம். இதற்கு, அரசின் அனுமதி தேவையில்லை” எனக் கூறியுள்ளது.
அமைச்சகத்தின் பதிலை வைத்துப் பார்க்கையில், இந்த சேனல், ஒரு அரசியல் கட்சியால், குறிப்பிட்ட காலத்திற்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ள ஒன்றுதான். அமைச்சகத்தின் அதிகார வரம்புக்குள் இது வரவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.
மேலும், பல டிஜிட்டல் தளங்கள், எந்த விதிமுறைகளின் கீழும் வராமல் இயங்கி வருவதையும் உதாரணம் காட்டுகிறார்கள். எனவே, நமோ தொலைக்காட்சியையும் அந்த வகையில் சேர்க்கிறார்கள்.
ஆனால், நாட்டின் பிரதமரைக் குறித்து விளம்பரப்படுத்தும் ஒரு சேனல், எப்படி, எந்தவித உரிமமும் பெறாமல், அமைச்சகத்தின் பட்டியலிலும் இடம்பெறாமல், அனைத்துப் பிரதான டிடிஎச் தளங்களிலும் கிடைக்கப்பெறுகிறது? என்ற தவிர்க்க முடியாத வலுவான கேள்வி எழுகிறது.
இப்படி ஒரு பெரிய விதிமீறல் நிகழும்போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் வெறுமனே ‘விளக்கம் கேட்டல்’ என்ற ஒரு சம்பிரதாயம் மட்டுமே மேற்கொள்ளப்படுவது குறித்து விமர்சனங்களும் எழாமல் இல்லை.
– மதுரை மாயாண்டி