பிரேசிலியா

கொரோனா அபாயம் குறித்துச் சரியான நடவடிக்கை எடுக்காத பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ மீது மாநில ஆளுநர்கள் கோபத்தில் உள்ளனர்.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸால் அனைத்து நாட்டு மக்களும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.   அனேகமாக அனைத்து நாட்டுத் தலைவர்களும் மக்களைத் தனிமைப்படுத்த ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.   உலக சுகாதார மையமும் இதை வற்புறுத்தி வருகிறது.  அமெரிக்காவில் முழு அடைப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிகமாகப் பரவி வரும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரேசில் நாட்டு அதிபர் இந்த அபாயத்தை கவனத்தில் கொள்ளாமல் இருக்கிறார். கடந்த வாரம் பொல்சனாரோ டிவிட்டரில் கொரோனா என்பது வெறும் சாதாரண காய்ச்சல் எனவும் இதற்காக மக்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவை இல்லை என பதிந்தார்   அது சர்ச்சைக்குள்ளாகி அந்த பதிவை டிவிட்டர் நிர்வாகம் நீக்கியது.

கடந்த திங்கள் அன்று பொல்சனாரோ தொலைக்காட்சி உரையில் வெறும் ஃப்ளூ ஜுரத்துக்கு உலகமே பயப்படுவதாகவும் அதை மக்கள் ஒரு போர் வீரனைப்போல் எதிர்கொள்ள வேண்டும்  எனவும் குறிப்பிட்டார்.  மேலும் அவர் ஏற்கனவே பிரேசில் மக்கள் தனித்திருக்க வேண்டாம் எனவும் பணியைத் தொடங்கலாம் எனவும் அறிவுறுத்தியதற்கு பிரேசில் நாட்டு சுகாதார அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

பிரேசில் நாட்டில் மொத்த மக்கள் தொகையான 21 கோடி பேரில் சுமார் 20 கோடி பேர் பணியைத் தொடங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  மொத்தம் உள்ள 27 மாநிலங்களில் 3 மாநிலங்களில் மட்டுமே மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.    இதுவரை பிரேசில் நாட்டில் கொரோனாவால் 5717 பேர் பாதிக்கப்பட்டு 201 பேர் உயிர் இழந்துள்ளதால் பணியைத் தொடங்க மாநில ஆளுநர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அதிபர் உத்தரவை மீறிப் பல மாநில ஆளுநர்கள் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்துதலை அமல் படுத்தி உள்ளனர்.   மேலும் அதிபர் பொல்சனாரோ நாட்டின் பொருளாதாரம் கொரோனாவால் வீழ்ச்சி அடையும் என்பதால் பணிகளைத் தொடங்கவேண்டும் எனக் கூறியதால் அவர் மீது அவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால் அதிபர் உத்தரவை ஆளுநர்கள் உதாசீனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசியல் ஆர்வார்கள் தெரிவித்துள்ளனர்.