சென்னை: சென்னையில் மாநகர பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்து மோதியதில் முன்பகுதி கண்ணாடி கள் அப்பளம் போல் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வள்ளலார் நகரில் இருந்து திருவொற்றியூர் வரை செல்லும் பேருந்து ஒன்று சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, அம்பத்தூரில் இருந்து திருவொற்றியூர் வரை செல்லக்கூடிய 34 ஆம் எண் பேருந்து எதிர்பாராதவிதமாக, முன்னால் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தின் பின்னால் மோதியது.  இதில் மோதிய  மாநகரப் பேருந்தின் முன் பகுதி கண்ணாடிகள் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்து காலைவேளையில் நடைபெற்றதால், பேருந்தில் பயணிகளும் அதிக அளவில் இல்லை. இதனால், யாரும் பாதிக்கப்படவில்லை. இதனால்,  அப்பகுதியில் சிறிது நேரம்  பரபரப்புடன் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருவொற்றியூர் காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்து பயணிகளை மாற்று பேருந்தில் மாற்றி ஏற்றி விட்டனர்.

ஒரு மாநகர பேருந்தில் பின்னால் வந்த மற்றொரு மாநகரப் பேருந்து மோதிய சம்பவம் திருவெற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகர பேருந்து சரியான முறையில் பராமரிக்கப்படாததாலும், பிரேக் பிடிக்காததாலும் இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.