8. பிராமணர்கள் நிலை சரிந்தே இருக்கிறது – ஆனால் எந்த அளவு?

சோவின் எங்கே பிராமணன் தொடர் குறித்து கடந்த பகுதியில் பார்த்தோம்.  உண்மையான பிராமணர் எவருமில்லை என்று அத் தொடர் பிரகடனப் படுத்தினாலும் கூட, அவரது நோக்கம் பிராமணர்களிடம் நீங்கள் அற வழியிலிருந்து விலகிவிட்டீர்கள் என்று சொல்வதல்ல. மாறாக  நாம் சபிக்கப்பட்ட பிறவிகளாகிவிட்டோம், நம்மை பெரும்பான்மை பிராமணரல்லாதார் வேட்டையாடுகின்றனர்,  இறைவனிடம் நாம் மன்றாடுவதுதான் ஒரே வழி என்றுதான்  சோ சொல்ல முயல்கிறார்.

சரி எந்த அளவு இறைவன் அவர்களைத் தண்டித்திருக்கிறார்? இன்று பிராமணர்களுக்கான வாய்ப்புக்கள் பல தளங்களிலும் மிகக் குறைவு என்பது உண்மையே. மருத்துவம், நீதித் துறை, பொறியியல் என பல தளங்களிலும் அவர்கள் கொடிகட்டிப் பறந்த காலமும் உண்டு. இன்றோ அங்கெல்லாம் பிராமணர்களைக் காண்பதே அரிதாக இருக்கிறது. அரசுப் பணியென்றால் கேட்கவே வேண்டாம்.

நீட் அவர்களுக்கு சாதகமானது என்ற ஒரு புரிதல் இருக்கிறது. அது எவ்வளவு சரி என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. அப்படியே ஆனாலும்,  அச்சமூகத்தின் நிலையில் பார தூர விளைவுகள் ஏற்பட்டுவிடப்போவதில்லை. நீட்டின் விளைவாக  ஒவ்வொரு ஆண்டும் மேலும் சில நூறு பிராமணர்கள் மருத்துவர்களாகக் கூடும், அவ்வளவுதான்.

மத்திய அரசுப் பணிகளில் பிராமணர்களால் ஓரளவு இடம் பிடிக்க முடிகிறது எனலாம். புதுடில்லிவாழ் தென்னிந்தியர்க ளில் 75 சதம் தமிழ்நாட்டு பிராமணர்கள், அவர்களில் மேலதிக மானோர் அரசுப் பணிகளில் இருப்பவர்கள் என்கிறது அண்மையில் வெளியாகியிருக்கும்  Tamil Brahmans: The Making of a Middle-Class Caste எனும் ஆய்வு நூல்.

அந்த வாய்ப்புக்களும் இப்போது அருகிவருவதாகக் கூறலாம். ஆனால் ஐ ஐ டி, சார்ட்டர்ட் அக்கௌண்டன்சி, கணினி தொழில்நுட்பம் இவற்றில் பிராமணர்களால் தடம் பதிக்க முடிந்திருக்கிறது.  ஆனால் அதற்காகக் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும். சிஏ படித்து முடிக்கவெல்லாம் நீண்ட காலமாகும். அதுவரை காத்திருக்க அவர்களது குடும்பச் சூழல் அனுமதிக்கவேண்டும். இப்பின்னணியில், பொருளாதார பாதுகாப்பு என்பது பிராமணர்களுக்கு குதிரைக்கொம்பாகி வருகிறது என்பது சரியான முறைப்பாடே.

என் போன்ற பலர் தடுக்கி விழுந்து, எழுந்து, யார் யார் கால்களிலோ விழுந்து, ஒரு வழியாக நிமிர்ந்து நிற்க முடிகிறது. எல்லோருக்கும் அத்தகைய வாய்ப்புக்கள் கிட்டிவிடுவதில்லை.

பொதுவாக முதலாளித்துவ சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் அதிகம். இப்போதோ தாராளமய மாக்கலின் விளைவாய் ஒரு பகுதியினர் தழைக்கின்றனர், வேறு பலர் பரிதவிக்கின்றனர். இந்த இடையறாத பரமபத விளையாட்டில் ஏணியில், ஏறுவது யார், பாம்பின் வாய்க்குள் சிக்குவது யார் என்பதையெல்லாம் துல்லியமாக வரையறுக்கவியலாது.

இந்தியாவைப் பொறுத்தவரை பொருளாதார வளம் மேலிருந்து கீழே மெல்ல மெல்ல பரவி வருகிறது,  உடன் நடுத்தரவர்க்கத்தினரின் எண்ணிக்கையும் என்பதை மறுக்கவியலாது.  அவ்வர்க்கத்தில் கணிசமான எண்ணிக்கையில்  பிராமணர்கள் இடம் பெற்றிருக்கின்றனர் என்பதே பொதுவான புரிதல்.

இருந்தாலும் கூட வசதியான வாழ்க்கைக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளே கடவுச்சீட்டு என்ற ஒரு கணிப்பு இருக்கிறதே. அத்துறைகளில் நுழைவதற்கு குறுக்கே இட ஒதுக்கீட்டு முறை நிற்கும்போது பிராமண இளைஞர்கள் ஆத்திரப்படுகின்றனர். அவர்களது பெற்றோர்கள் அங்கலாய்க்கின்றனர்.

மதிப்பெண்கள் சற்று குறைவாய் பெற்றும் பிற்படுத்தப்பட்டோர் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் சேரும்போது அல்லது அதிக படிப்பு தேவைப்படாத அரசுப் பணிகளில் மற்ற சாதியினர் முன்னுரிமை பெறும்போது பிராமணர்கள் குமுறுகின்றனர் –  “அய்யகோ நாங்கள் என்ன பாவம் செய்தோம்…பிராமண னாய்ப் பிறப்பதே பாவமா? எங்கப்பா அப்பிராணி. எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார். கையூட்டு பெற்றதும் கிடையாது. யாருக்கும் எத் தீங்கும் இழைத்தது கிடையாது. ஆயினும் அவரது மகனாகப் பிறந்ததால் எனக்கு எல்லா வாய்ப்புக்களும் மறுக்கப்படுமா…இது அநீதியல்லவா?

இது நியாயமான கேள்வியாகத் தோன்றும். ஆனால் அப்படிக் கேட்பவர்கள் பலவற்றை வசதியாக மறந்துவிடுகின்றனர். அவற்றை நினைவூட்டும் வகையிலேயே இந்தத் தொடர்.

முதலில் மருத்துவ, பொறியியற் கல்லூரிகளானாலும் சரி, அரசுப் பணிகளானாலும் சரி, அவற்றில் எத்தனை இடங்கள் இருக்கின்றன? எவ்வளவு பேர் மோதுகிறார்கள்?

எந்த சாதிக்கும் மிகக் கூடுதலாகக் கிடைத்துவிடுவதில்லை. அனைத்து வகுப்புக்களிலிருந்தும் சிறு சிறு பகுதியினருக்கே வாய்ப்பு கிட்டுகிறது. ஒட்டுமொத்த மக்கட் தொகையில் அந்தந்த சாதியினரின் எண்ணிக்கைக்கேற்ப இடங்கள் கிடைத்துவிடுகின்றனவா? இல்லைதானே.

முற்பட்டோருக்கு தனி ஒதுக்கீடே இல்லை என்பதால் அவர்களுக்கு கூடுதல் பின்னடைவு என்பதும் சரிதான். 69:31 விகிதாச்சாரம் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டே வருகிறது.

இன்னொருபுறம் மாநிலத்தில் முற்பட்டோர் தொகை குறைந்து கொண்டே வந்திருக்கிறது! அவர்கள் அதிக எண்ணிக்கையில் மரிப்பதாலோ அல்லது மாநிலத்தைவிட்டு வெளியேறுவதாலோ இப்படி நடக்கவில்லை. மாறாக 70 களில் தொடங்கி சகட்டு மேனிக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மேலும் மேலும் சாதிகள் இணைக்கப்பட்டு வந்திருக்கின்றனர். எனவேயே  முற்பட்ட சாதியினர் மக்கட் தொகை வீழ்ச்சி.

ஆக இப்பிரிவினரின் மக்கட் தொகை தொடர்ந்து வீழ்ந்துவிட்ட நிலையில், விகிதாச்சாரப்படி அவர்களுக்கு உரிய இடங்கள் கிடைக்கவில்லையே என வருந்துவது கூட அபத்தம் எனத்தோன்றும்.

இன்னும் சிலர் வாதாடுவதைப் போல் பிராமணர்கள் மொத்த மக்கட்தொகையில் இரண்டு அல்லது மூன்று சதமே. அதற்கேற்பவே அவர்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பிரதிநிதித்துவம் என்றால் என்னாகும்? இப்போது கிடைப்பதும் இல்லை என்றாகிவிடும்!!

இப்படிப்பட்ட சூழலில்தான் பிற்பட்ட சாதித் தொகுப்பே எல்லாவற்றையும் அள்ளிச் செல்லலாமா, எங்களுக்கு ஒரேயடியாக வாய்ப்புக்கள் மறுக்கப்படலாமா என பிராமணர்கள் அரற்றுகின்றனர்.

(தொடரும்)