13. ராமானுஜரைத் தெரியுமா?

”உங்களுக்கு சாதிப் பெருமை, வெறி, அதிகம்…தீண்டாமை கடைபிடித்தீர்கள், இன்னமும்தான்…பிராமணரல்லாத அனைவரையுமே நீங்கள் தீண்டத்தகாதவர்களாக நீங்கள் கருதினீர்கள்….வீட்டிற்குள்ளேயே விடமாட்டீர்கள்…….உங்கள் ஆதிக்கம் தகர்க்கப்பட்ட நிலையில், ஏனையோர் முந்தைய கால கட்டங்களை நினைவு கூறாமல் இருப்பார்களா….”  என்று வாதிட்டால், நம் ஊர் ஆட்கள், ”ஆஹா, உனக்கு நாயன்மாரைத் தெரியுமா, ஆழ்வார்களைத் தெரியுமா…அவர்களை எல்லாம் நாம் வணங்குகிறோமா இல்லையா…ராமானுஜர் எத்தனைபேரை வைஷ்ணவத்திற்கு மாற்றியிருக்கிறார்?…” என்று பதில் வரும்.

உண்மையில் ராமானுஜர் குறித்த பல செவி வழிக் கதைகளே. இன்று நகைச்சுவையாகச் சொல்வார்கள் கறுப்பு அய்யங்கார்களெல்லாம் ராமானுஜர் கைங்கரியம் என !

இது குறித்து நடந்த விவாதத்தினை பரிவார கருத்தியலாளர் அரவிந்தன் நீலகண்டன் ஸ்வராஜ்யா எனும் அவர்களது இணைய தள ஏட்டில் நினைவுகூர்ந்து வழக்கம்போல் சகட்டுமேனிக்கு மார்க்சீயத்தை சாடியிருக்கிறார். ஆனால் ராமானுஜரால் வைணவ பிராமணர்கள் மத்தியில் எந்தவிதமான பாரதூர மாற்றங்களை ஏற்படுத்தமுடிந்தது என்ற என் கேள்விக்கு நேரடியான பதிலில்லை.

ராமானுஜரின் போதனைகள் சாதீயத்தை உடைக்க முற்படுகின்றன என்பது உண்மை. ஆனால் அவரது வழி வந்தவர்கள் எவரும் சாதியினை நிராகரிப்பவர்கள் அல்லர். ஆஹா அவர் போல உண்டோ என முழங்குவர் முக நூலிலும், பொது மேடைகளிலும். சொந்த வாழ்விலோ ஆச்சார அனுஷ்டானங்கள், மற்ற சாதிகளை அசூயையுடன் நோக்கும் போக்கு, ஒன்றுக்கும் குறைவிருக்காது.

ராமானுஜர் பெயரால் இயங்கும் அனைத்து மடங்களும் மிக மோசமான பிற்போக்கு சிந்தனைகளை போற்றி வளர்ப்பவை.

ராமானுஜருக்கு மூன்று, நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பிராமணரல்லாத ஆழ்வார்கள் மனமுருக பெருமாளைத் தொழுதிருக்கின்றனர், அவர்களது பிரபந்தங்கள் பிரபலமாயின:

குலந்தாங்கு சாதிகள் நாலிலும்
கீழ்இழிந்து எத்தனை
நலந்தான் இலாதசண் டாளசண்
டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல்
மணிவண்ணற்கு ஆள்என்றுஉள்
கலந்தார் அடியார் தம்மடி
யார்எம் அடிகளே.

இப்பாசுரத்தை எழுதிய நம்மாழ்வார் பிள்ளைமார் வகுப்பு. மேலும் அவர் திருமாலின் படைத் தளபதி சேனைமுதலியாரின் அவதாரம். திருமால், மகாலட்சுமிக்கு அடுத்து வைணவர் வணங்கும் கடவுளர்களில் ஒருவர். இந்த சேனை முதலியார்.

ஆழ்வார்களில் பலர் பிராமணரல்லாதாரே. அதே போலத்தான் நாயன்மார்களிலும்.

அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே

இது திருநாவுக்கரசர்.

இப்படியெல்லாம் பட்டியலிடுவார்கள். ராமானுஜரால் ஈர்க்கப்பட்ட ராமானந்தர்தான் வட இந்தியாவில் பரவிய பக்தி இயக்கத்திற்கு வித்திடுகிறார். கபீர், துக்காராம், ரவிதாஸ் என்று பலர் அவ்வழியில். அவர்கள் இன்றும் போற்றப்படுகின்றனர். இவையெல்லாம் எங்களின் சாதி கடந்த ஆன்மிகத்திற்கு சான்றில்லையா என்றும் கேட்பார்கள்.

ராமானுஜர் வணங்கப்படுவார் ஆனால் அவரது கொள்கைகள் வசதியாக மறக்கப்படும். ராமானுஜர் குறித்து ஒருவர் அண்மையில் நூல் என்றை எழுத பலர் அதை வரவேற்றிருக்கின்றனர். ஆனால் அந்த நூலாசிரியரோ தீவிர இந்துத்துவர். சனாதனி, முஸ்லீம் வெறுப்பாளர்.

வைணவம் அனைவர்க்குமே என்று நீங்கள் நம்புவீர்களேயானால் எப்படி கிறித்தவர்களையும் இஸ்லாமியரையும் உங்களால் அப்படி சாட முடிகிறது, வெறுப்பை உமிழமுடிகிறது?

அதே போலத்தான் எல்லா சாதியினர்க்கும் இறை பொதுவே எனில் ஏன் உயர் சாதி இந்துக்கள் மற்ற சாதியினரை ஒதுக்குகின்றனர்? வேறு சாதியில் மகன்/மகள் மணந்துகொள்ள விரும்பி, இவர்கள் அதைத் தடுக்க முடியாமல் போனால், ஒட்டுமொத்தமாக சம்பந்தப்பட்ட குடும்பங்களைப் புறக்கணிப்போர் பலர்.

பிராமணர்கள் பொதுவாக வன்முறையில் இறங்குபவர்கள் அல்லதான். உண்மை. பயந்த சுபாவம். அடிதடியில் இறங்கும் திராணி இல்லை. அதை நான் தவறாகச் சொல்லவில்லை. அது ஒருவகையில் நல்லதும் கூட. ஆனால் அவர்களது நிராகரிப்பும் ஒருவகை வன்முறைதானே. சாதி ஆணவக் கொலைகளில் இறங்காததால், இவர்கள் உத்தமர்கள் என்று பொருளில்லை.

கருத்தியல் வன்முறைகளும் ஆபத்தானவை, கண்டனத்திற்குரியவை. நான் வளர்ந்ததெல்லாம் உலர் கழிப்பறை காலத்தில், ஃப்ளஷ் அவுட் கிடையாது. அம்மா என்று உரத்து குரல் கொடுத்துக்கொண்டே வந்து, மலத்தை அள்ளிச் செல்வோரைப் பார்த்தாலே மனது பிசையும்.

மலம் சேரும் பகுதிக்கு தகரக் கதவு இருக்கும். அதைத் திறந்துதான் அள்ளுவார்கள். அந்த சிறிய கதவை மூடுவதில் ஏதோ சிக்கல் எங்களுக்கு எதிர்வீட்டில். அதை சரி செய்யவும் அவர்கள்தான் வேண்டும்.

பாட்டியம்மா வாயிலில் நின்றுகொண்டு ஏதோ முணுமுணுத்துக்கொண்டே அந்தப் பக்கமும் இந்தப்பக்கமும் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது வேலை கெடுகிறதாம். தொழிலாளி வர நேரமாகிறதாம்.

ஒருவழியாக அந்த நபர் வந்து கைகளைக் கட்டிக்கொண்டு ஏதோ சமாதானம் சொல்ல, மலசலக் குழி கதவை சரி செய்ய ஆணி, கம்பி, சுத்தியல் என கீழே வைத்துவிட்டு உள்ளே வேகமாகப்போனார் பாட்டி. இரண்டு மூன்றுதடவை வந்து விரட்டிவிட்டு ஒரு வழியாக சரியானதும், சில்லறைகளை பணியாளரின் கரங்களில் வீசினார். அதற்கடுத்து நடந்தது எனக்கு கூடுதல் அதிர்ச்சியைக் கொடுத்தது. பணியாளர் பயன்படுத்திய கருவிகளை நீர் ஊற்றிக் கழுவிய பிறகுதான் உள்ளே எடுத்துச் சென்றார் அந்த அம்மா.

பேஷ்வா கால மராட்டியத்தில் தாழ்த்தப்பட்டோர் ஊருக்குள் நுழைய அனுமதி கூட மதியத்தில்தானாம். ஏனென்றால் அப்போதுதான் அவர்கள் நிழல் சிறியதாக இருக்குமாம். யார் மீதும் தவறாகப் பட்டுவிடக்கூடாதல்லவா.

இன்று எந்த அளவு மனநிலை மாறியிருக்கிறது?  பேஷ்வா காலத்திற்கு முந்தையதுதானே பக்தி இயக்கம்?

நம்மாழ்வாரும் திருநாவுக்கரசரும் அவதரித்த இம்மண்ணில்தானே இன்றும் தீட்டு, அசுத்தம் பார்க்கப்படுகிறது?

கீழ்சாதிபக்தர்களுக்கு சிலை வைத்து வணங்குவது தங்கள் பார்வை ரொம்ப விசாலமானது என்று காட்டிக்கொள்ள அவ்வளவுதான். உளவியல் மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை என்பதைத்தான் இங்கே வலியுறுத்த விரும்புகிறேன்.

புரட்சிக்கொடி ஏந்துபவர்களை நீ நம்மாள்தானே என்று ஏற்றுக்கொள்வது திருதிராஷ்டிர அரவணைப்பு. ,மகாபாரதத்தின் இறுதியில், பாண்டவர்கள் தங்கள் பெரியப்பாவை சந்தித்து மரியாதை செலுத்துகின்றனர். தன் புதல்வர்கள் அனைவரையும் இழந்துவிட்ட திருதிராஷ்டிரரும் ஒப்புக்கு அவர்களிடம் பேசிக்கொண்டிருப்பார், ஒவ்வொருவராக பாண்டவ சகோதரர்கள் காலில் விழுந்து வணங்குவர். துரியோதனனைக் கொன்ற பீமனின் முறை வரும்போது சந்திப்பின்போது உடனிருக்கும் கிருஷ்ணன் அவனை பெரியப்பா அருகில் செல்லவிடாமல் தடுத்து, அவனைப் போன்ற இரும்பு சிலையினை திருதிராஷ்டிரன் முன் நிறுத்துவார்.  மகிழ்ச்சி பொங்குவதுபோல நடித்துக்கொண்டே அந்தகன் திருதிராஷ்டிரன் அச்சிலையை அரவணைக்க, இரும்புச் சிலை அப்படியே நொறுங்கிவிடும்.

பக்தி இயக்கத்தினர் இவ்வாறு உள்ளிழுக்கப்பட்டு நசுக்கப்பட்டனர். ஒடுக்குமுறை தொடர்ந்தது. ஆனால் பெரியாரோ புத்தர், ஆழ்வார், நாயன்மார் பாதைகளைத் தவிர்த்தார். பிராமணீயமும் வீழ்ந்தது.

(தொடரும்)