10.  காலச்சக்கர சுழற்சியில் கீழே விழும் முன்  – த.நா.கோபாலன்

1851 ஆம் ஆண்டில் அன்றைய வருவாய் வாரியம் (Board of Revenue) நிலை ஆணை 128ஐ பிறப்பிக்கிறது. பிராமணர்கள் மட்டுமே அரசு அதிகாரிகளாகமுடியும் என்ற நிலையினை மாற்றவே அந்த ஆணை. தாசில்தார் மட்ட நியமனங்களில் மற்ற சாதியினர்க்கும் பிரதிநிதித்துவம் வேண்டும், குறிப்பாக, அதற்கடுத்த நிலையில் சிரஸ்தேதார், தலைமை எழுத்தர் ஆகியோர் வேறு சாதிகளிலிருந்தே இருக்க வேண்டும் என்கிறது அது.

ஆனால் மூன்றாண்டுகள் சென்று வாரியம் எப்படி என ஆய்ந்தபோது, நெல்லூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு தெலுங்கு பிராமணரின் உறவினர்கள் 49 பேர் வருவாய்த் துறையில் பணி யமர்த்தப்பட்டது தெரியவந்தது. இத்தகைய நியமனங்கள் அரசை ஏமாற்றும் வேலை, பிராமணர்கள் தங்கள் நிலையினைப் பயன்படுத்தி முடிந்தவரை தங்கள் சமூகத்திற்கு என பறித்துக்கொள்கிறார்கள், இது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல எனக் கடுமையாகவே வாரியம் கூறுகிறது.

ஆனால் பல ஆண்டுக்காலம் பிராமணர்களின் இரும்புப் பிடியை அசைக்கவே முடியவில்லை. பணியில் இருப்போர் பல்லிளித்து, தலை சொறிந்து மாமன், மச்சான், மச்சானுக்கு மச்சான் என தங்கள் ஆட்களை சேர்க்கமுடிந்தது. பின்னரே எழுத்துத் தேர்வு முறை அமலுக்கு வருகிறது.

ஆனால் அத்தகைய தேர்வுகள் வழியாகவும் பிராமணர்களே மிக அதிகமாக அரசு இயந்திரத்தை நிரப்பிவந்தனர்.

1911 ஆய்வின்படி  23 கெஜட் அந்தஸ்து அதிகாரிகளில் 22 பேர் அவர்களே. கெஜட் அல்லாத பதவிகளிலும் 4,701 பேர் பிராமணர்கள், மற்ற வகுப்பினர் 2440தான்.

1913ஆம் ஆண்டில் சென்னை ராஜதானி அரசின் தலைமைச் செயலாளர் அலெக்சாண்டர் கார்ட்யூ  எத்தனை தேர்வுகள் வைத்தாலும் பிராமணர்களே வெற்றி பெறுவர். அந்த அளவு அவர்களுக்கு கற்கும் வாய்ப்பிருக்கிறது, சூழலிருக்கிறது பாரம்பரியம் இருக்கிறது.

4.1 கோடி மக்கட் தொகையில் வெறும் 11 லட்சம், சுமார் மூன்றே சதம் மட்டுமே அவர்கள். ஆனால் பட்டப் படிப்பு முடிப்பவர்களில் 72 சதம் அவர்கள். பிராந்திய அரசுப் பணிகளுக்கான தேர்விலும் அவர்களே முந்துகின்றனர். எனவே சமூக நீதி வேண்டுமானால் பிராமணரல்லாதாருக்கென தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று குறிப்பிட்டார். கார்ட்யூ சில மாதங்கள் ராஜதானியின் ஆளுநராகவும் பணியாற்றியவர்.

மயிலை தமிழ்ச்சங்கம்

இந்துத்துவவாதிகள் சொல்லிக்கொள்வது போன்று பிராமணர்களையும் அல்லாத வர்களையும் பிரித்தானியர்கள் வந்து பிரித்துவைக்கவில்லை. பெரும்பான்மை சமூகத்தை ஒதுக்கியே வைத்து, உங்களை விட நாங்கள் உயர்ந்தவர்கள் என்று நம்பவைத்து, அவர்கள் அறியாமையை, புரிதல் கோளாறுகளைப் பயன்படுத்தி செங்கோலோச்சிக்கொண்டிருந்த பிராமணர் களை அடையாளம் கண்டது கார்ட்யூ போன்ற அதிகாரிகளே. பிரித்தானிய ஆட்சி மட்டும் இங்கே வந்திராவிட்டால் நிச்சயமாக எளிதில் பிராமண ஆதிக்கம் தகர்ந்திருக்காது.

1916ல் வெளியிடப்பட்ட பிராமணரல்லாதார் அறிக்கை (Non Brahmin Manifesto) கார்ட்யூவின் கருத்துக்களை மேற்கோள் காட்டி 4.15 கோடி மக்கட் தொகையில் 4 கோடி பேர் பிராமண ரல்லாதாராயிருந்தும் அரசியலிலோ, அரசுப் பணிகளிலோ, பிரபல துறைகளிலோ பிரதிநிதித்துவம் மிகக்குறைவாகவே இருக்கிறது. இது அநீதி. அவர்களுக்கென தனி இட ஒதுக்கீடு வேண்டும் எனக் கோரியது.

நீதிக் கட்சி இவ்வறிக்கையின் பின்னணியில்தான் உருவானது. நீதிக் கட்சியிலிருந்துதான் பெரியார் ஈவேராவின் சுயமரியாதை இயக்கம் தோன்றியது.

தாங்கள் ஒதுக்கப்படுகிறோம், நிராகரிக்கப்படுகிறோம் என்றெல்லாம் பிராமண இளைஞர்கள் குமுறும்போது இந்த அண்மைக்கால வரலாற்றையும் மனதில் கொள்வது அவசியம்.

ஒரு நூறு வருடங்களுக்கு முன்னர் அங்கிங்கெனாதபடி எல்லாத் துறைகளையும் ஆக்கிரமித்து, 95-97 சத மக்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரும்  நிலையில் பிராமணர்கள் இருந்தார்கள்தானே. அந்நிலை தலைகீழாய் மாறும்போது, உச்சாணிக்கொம்பில் இருந்தவர்கள் கீழே விழாமல் வேறு என்ன நடக்கும்?

திறமை, அதற்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். சமூக நீதி எனச் சொல்லிக்கொண்டு பிராமணரல்லாதோருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கத் துவங்கினால் நிர்வாகம்தான் பாதிக்கப்படும், அதனால் பிராமணரல்லாதோருக்கே பின்னடைவு என்றெல்லாம் அன்றைய  மேல்தட்டு பிராமணர்கள் வாதிட்டனர். காலனீய அரசில் பலரும் அது சரியென்றே நினைத்தனர். மிகச் சிறிய அளவிலான இட ஒதுக்கீட்டிற்குக் கூட எத்தனை ஆண்டுக்காலம் நீதிக் கட்சி அரசுடன் மோதவேண்டியிருந்தது?

காங்கிரஸ் மக்களை அணி திரட்டுவதில் பெரும் வெற்றி பெற்று வந்ததென்னவோ உண்மை. அங்கும் பிராமணர்களே முன்னணியில் இருந்தனர். காந்தியாரோ வர்ணாஸ்ரம தர்மத்தில் உறுதியாக இருந்தார்.  தாங்கள் அங்கே ஓரங்கட்டுப்படுவோம் என்றஞ்சிதானே பிராமணரல்லாதார் தலைவர்கள் தனிக் கட்சி தொடங்கி பிரிட்டிஷாருக்கு  தங்கள் விசுவாசத்தையும் வலியுறுத்தவேண்டி நேர்ந்தது.

டி.எம்.நாயர்

டி எம் நாயர் 1916 Madras Legislative Council தேர்தலில் தோற்க டிக்கப்படுகிறார். அதற்கு பிராமணர்களே காரணம் என நினைக்கிறார். அந்த எரிச்சலில்தான் அவர் நீதிக் கட்சி துவங்கவே அடித்தளமிடுகிறார்.

நிலச்சுவான் தாரர்களாக இருக்கிறீர்கள், கல்வி மையங்களை யும் அரசு அலுவலகங்களையும், நீதி மன்றங்களையும் இன்னும் எண்ணற்ற பல துறைகளையும் ஆக்கிரமித்துக் கொள்கிறீர்கள். இப்படி எல்லாமே எங்களுக்கே என அகராதி யாகச் செயல்பட்டால், ஒதுக்கப்படுவோர் விழித்தெழும்போது உங்களுக்கு பதிலடி கிடைக்கத்தானே செய்யும்?

முன்னோர் செய்த பாவங்களுக்கு பின் வரும் சந்ததியினரை தண்டிப்பது எவ்வகையில் நியாயம் எனக் கேட்பதும் சரிதான். ஆனால் மனித குல வரலாறு அப்படித்தானே போகிறது!

தவிரவும் முன்பு குறிப்பிட்டதைப் போன்று இருக்கும் வாழ்வாதாரங்களை ஜனநாயக ரீதியில் பகிர்ந்துகொள்வதே இன்றைய நாகரிகம். ஆனால் வாழ்வாதாரங்களோ குறைவாக இருக்கின்றன. அந்நிலையில் ஒதுக்கீட்டின் மூலம் சிலரை ஒதுக்குவது தவிர்க்க இயலாதது. அவ்வாறு ஒதுக்கப்படுவதற்கு உகந்தவர்கள் பல்வேறு வகைகளில் நீண்ட காலம் பல சலுகைகளை  அனுபவித்தவர்கள்தானே.