திருப்பதி
திருப்பதி தேவஸ்தான புதிய தலைவராக பி ஆர் நாயுடு பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கான அறங்காவலர் குழு மாற்றியமைக்கப்படுவது வழக்கம். கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு, சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், முழுமையாக கலைக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். திருப்பதி தேவஸ்தானத்துக்கான அறங்காவலர் குழு கடந்த 30ம் தேதி அறிவிக்கப்பட்டடு குழு தலைவராக தொல்லினேனி ராஜகோபால் நாயுடு (பி.ஆர்.நாயுடு) நியமிக்கப்பட்டார். மேலும் உறுப்பினர்களாக எம்எல்ஏக்கள் ஜோதுலா நேரு, பிரசாந்திரெட்டி, எம்.எஸ்.ராஜூ, பனபாக லட்சுமி (முன்னாள் மத்திய மந்திரி), உள்பட 24 பேர் நியமிக்கப்பட்டனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 54 ஆவது அறங்காவலர் குழு தலைவராக இன்று காலை ஏழுமலையான் கோவிலில் பிஆர் நாயுடு பொறுப்பேற்று கொண்டார். தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இன்று 17 உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழுவில் தெலுங்கு தேட்ச கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் தமிழகத்தைச் சேர்ந்த ராம் மூர்த்தி, குஜராத்தைச் சேர்ந்த ஆதித் தேசாய் (எம்சிஐ முன்னாள் தலைவர் கேதன் தேசாய் மகன்), மராட்டியத்தின் பொருளாதார நிபுணர் சவுரப் போரா, மத்திய அமைசர் அமித்ஷாவின் நெருங்கிய நண்பரான கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்