மும்பை: எந்த அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்களோ, அந்த அணியே கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம் என்று இந்திய – ஆஸ்திரேலிய தொடர்கள் குறித்து கணித்துள்ளார் இந்திய முன்னாள் வேகப்பந்து நட்சத்திரம் ஜாகிர்கான்.

ஜாகிர் கான் பேசியுள்ளதாவது, “ஆஸ்திரேலியாவின் ஆடுகளங்கள், எப்போதும் வேகத்துக்கு ஒத்துழைப்பவை. அங்கு பவுன்சர்கள் சாதாரணம். எனவே, போட்டிகள் பந்துவீச்சாளர்களின் பக்கமே இருக்கும்.

எதிரணி பேட்ஸ்மென்களை திணறடித்து, அவர்களை குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்தும் பந்துவீச்சாளர்கள் உள்ள அணியே, கோப்பையை வெல்லக்கூடும்.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர், இந்தமுறை அணியில் இடம்பெற்றிருப்பதால், இந்திய அணிக்கான சவால் கூடுதலாக இருக்கும். அதேசமயம், இரண்டு அணிகளுமே பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமமாக இருப்பதால், யார் வெல்வார்கள்? என்பதை கணிப்பது கடினம்” என்றுள்ளார் ஜாகிர் கான்.