டில்லி:
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும், சில மாநிலங்களில் ஆட்சி புரிந்தும் வந்த கம்யூனிஸ்டு கட்சி தற்போது, கட்சியை நிர்வகிக்கக் கூடிய சிறப்பான தலைவர்கள் இல்லாத நிலையில், தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றுள்ளனர்.
மக்களுக்கு எதிரான மத்திய மாநிலஅரசுகளுக்கு எதிரான போராட்டங்களில் முன்னிலை வகிப்பது கம்யூனிஸ்டு கட்சி. அரசியல் ஆசாபாசங்களுக்கு அடிபணியாமல் மக்கள் நலனையே கருத்தில் கொண்டு செயல்பட்டு வந்தது. இதன் காரணமாக மேற்குவங்கம், கேரளா, திரிபுரா உள்பட சில மாநிலங்களில் தொடர்ந்து ஆட்சியை பிடித்து வந்தது. மேலும், தேசிய அளவிலும் காங்கிரஸ், பாஜகவுக்கு அடுத்த நிலையில் முக்கிய எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டு வந்தது.
கடந்த 2004 பாராளுமன்ற தேர்தலில் 49 எம்.பி.க்களை பெற்ற காம்ரேடுகள், கடந்த 2014 தேர்தலின்போது 12 தொகுதிகளை மட்டுமே பெற்று மிகப்பெரிய சரிவை சந்தித்து. இந்த நிலையில், தற்போது நடைபெற்ற தேர்தலில் வெறும் 5 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளது.
நாடு முழுவதும் இரு கட்சிகளும் சேர்ந்து 100 இடங்களில் போட்டியிட்ட நிலையில் வெறும் 5 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தமிழகத்தில் திமுக கூட்டணியில் சேர்ந்ததால்தான் 4 இடங்களை பெற முடிந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பி.ஆர். நடராஜன் கோவையிலும், சு.வெங்கடேசன் மதுரையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செல்வராசு நாகப்பட்டினத்திலும், கே.சுப்பராயன் திருப்பூரிலும் வென்றனர். அத்துடன் கேரள மாநிலம் ஆலப்புழையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஏ.எம். ஆரிப் வெற்றி பெற்றுள்ளார். மற்ற அனைத்த மாநிலங்களிலும் கம்யூனிஸ்டு கட்சிகள் முழுவதுமாக ஓரங்கப்பட்டு உள்ளன.
இதன் காரணாக இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களது தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
தேசியக்கட்சிக்கான அந்தஸ்து என்ன?
ஒரு கட்சி, தேசிய கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு 3 அடிப்படை அம்சங்கள் தேவை
பாராளுமன்ற தேர்தலில் குறைந்த பட்சம் 11 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
நான்கு மாநிலங்களில் இருந்து 4 இடங்களை கைப்பற்றுவதுடன், 6 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும்.
நான்கு மாநிலங்களில் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும். 8 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், மேற்கண்ட அடிப்படை விதிகள் தற்போதைய சூழலில் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு பொருந்தா நிலையில், இரு கட்சிகளும் தங்களது தேசிய கட்சி அங்கீகாரத்தை இழக்கின்றன.