சென்னை; புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சென்னையில் அமைச்சர்கள் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில்  500க்கும் மேற்பட்ட  மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

சென்னையில் பபாசியின் புத்தக கண்காட்சி இந்த மாதம் 27ந்தேதி தொடங்க உள்ளது. இதுவரை பொங்கல் விடுமுறை நாட்களில் நடைபெற்று வந்த இந்த கண்காட்சி இந்த ஆண்டு முதல் அரையாண்டு விடுமுறையையொட்டி நடைபெறுகிறது. அதன்படி,   தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் நந்தனம்  மைதானத்தில், வரும் 27ந்தேதி தொடங்க உள்ளது.

இந்த   புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலையில், சென்னையில் இன்று பேரணி நடைபெற்றது. இதனை, தென்னிந்திய புத்தக விற்பனை யாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத் தலைவர் சேது சொக்கலிங்கம் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

இந்த  பேரணியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர். அதன்படி நந்தனம் ஆவின் பாலகம் அருகில் இருந்து ஒய்எம்சிஏ மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.