உறவுகள்கவிதை பகுதி 9

போன்சாய் மரங்கள்

பா. தேவிமயில் குமார்

 

நாங்கள்

பிரபஞ்ச வட்டிக் கடையின்

பெட்டிக்குள் அடைபட்ட

நட்சத்திர வைரங்கள் !

இனி, மீட்கவே

முடியாது !

வீழப்போகும்

எரி நட்சத்திரத்தின்

எச்சங்களுக்கு

எடுத்துக்காட்டுகள்

எங்கள் நிலை !

பௌர்ணமிகளாய்

பளபளப்பதற்கு முன்

பறிக்கப்பட்ட,

பாதி நிலா நாங்கள் !

 

தேதிகளே

இல்லாத

தினசரிகளாய்

மாற்றப்படுகிறோம்

ஏனிந்த நிலை ?

 

இனி !

விரும்பிய

வண்ணங்கள்

வைக்கப்படாத

தூரிகைப் பெட்டிகள்

நாங்கள் !

 

அனுமதியுடன்

களவாடப்படும்

ஆற்றுமணல்

நாங்களல்லவா ?

 

நெய்யப்படாமலே

அங்காடிகளுக்கு

செல்லும்

ஆயத்த ஆடைகளானோம் !

 

எழுத்தாணிகள், இனி

எங்களை

அறையப்படும்

சிலுவை மரத்தின்

சின்னமாக்கட்டும் !

புத்தகப் பைகள்

இனி,

கனவுகளை

நிரப்பாது,

காய்கறிகளாலும்

கவலைகளாலும்

நிரப்பப்படும் !

 

வழிகாட்டும் பலகைகள்

ஒளிந்து கொண்டது,

தேடுவோரில்லை,

தொலைந்து போன எங்களை !

 

ஏ, சமுதாயமே !

எங்களின்

எதிர்காலக்கனவெல்லாம்

எச்சில் உமிழ்கிறதே

உங்கள் மீது !

ஏறெடுத்துப் பாருங்கள்

எங்கள் நிலைமையை !

 

மங்கல இசையோடு

நொறுக்கப்பட்ட

நினைவுகளுக்கு

இறுக்கிக் கட்டப்படும்

வேலிக் கயிறுகள் !

வேதனைக் கயிறுகளாக…….

 

மீறப்பட்ட

சட்டங்களின்

சமகால

சாட்சிகளா ய் நாங்கள் !

அதோடு

எங்குமே

எடுபடாத வாக்குமூலங்கள் !

எங்கள் தரப்பில் !

இதுதான் இன்றைய நிலை !

 

உணவுச் சாலைகள்

மட்டுமல்ல !

உற்பத்திச் சாலைகளும்

உரிமை என்ற

பெயரில்,

திணிக்கப்படுகிறது

எங்கள் மீது !

நாங்கள்

விரும்பவில்லையென்றாலும்

போன்சாய்

மரங்களாக

மாற்றப்பட்டோம் !

 

வாழ்க்கைப்

போட்டியிலிருந்து

விலகிக் கொண்டோம் !

அடிமைகளாக

விலங்கிடப்பட்டோம் !

அதன் பெயர் “மணமாலை”

 

இப்படிக்கு

இளவயது

திருமணத்தால்

பாதிக்கப்பட்ட

சிறுமிகள் !