புதுடெல்லி:
ஜெட் ஏர்வேஸ் சேவை நிறுத்தப்பட்டதையடுத்து, சர்வதேச விமான நிறுவனங்களுக்கு அடுத்த 3 மாதங்கள் பொன்னான காலம் என்று கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் 120-க்கும் மேற்பட்ட விமானங்களை ஜெட் ஏர்வேஸ் இயக்கியது.
வங்கிகளிலிருந்து அவசர நிதி கிடைக்காததால், ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் நிர்வாக செலவுகளை ஈடுகட்ட முடியாமல் ஜெட் ஏர்வேஸ் திணறியது.
இதனையடுத்து, அனைத்து சேவைகளையும் ஜெட் ஏர்வேஸ் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி முதல் நிறுத்தியது.
இதனால் மற்ற சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டப் போகின்றன.
இந்தியாவிலிருந்து துபாய், லண்டன், நியூயார்க், சிங்கப்பூர் மற்றும் பாலி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் விமான கட்டணங்கள் 3 சதவீதம் முதல் 32 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜுன் மாதம் இரண்டாம் வாரம் வரை கட்டணம் குறையாது என்று தெரிகிறது.
ஜெட் ஏர்வேஸ் நிறுத்தப்பட்டதால், பிரிட்டிஷ் ஏர்வேஸ்ல கேத்தே பசிபிக் ஏர்வேஸ் லிமிடெட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்,யுனைட்டட் ஏர்லைன்ஸ் ஆகியவற்றுக்கு 27% பயணிகள் அதிகரித்துள்ளனர்.
ஸ்பைஸ் ஜெட் மீது புகார்
இதற்கிடையே, நேர்காணலின்போது தங்களை ஸ்பைஸ் ஜெட் மூத்த அதிகாரி அவமானப்படுத்தியதாக ஜெட் ஏர்வேஸ் பைலட்கள் கூறியுள்ளனர்.
உங்களை வேலைக்கு அமர்த்தி தொண்டு செய்கிறோம் என்று அவர்களிடம் ஸ்பைஸ் ஜெட் அதிகாரி தெரிவித்தாக கூறினர்.
எனினும் இந்த குற்றச்சாட்டை ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் மறுத்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுத்தப்பட்டவுடன் 1,300 பைலட்கள் உட்பட அதன் 20 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.
அவர்களுக்கு வாய்ப்பளிக்கவே ஸ்பைஸ் ஜெட் விரும்புகிறது. அவர்களை அவமானப்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.