இந்தி நடிகர் சோனுசூட்டுக்கு சொந்தமாக மும்பை ஜூகு பகுதியில் 6 மாடி குடி இருப்பு உள்ளது.
இதனை முறையான அனுமதி பெறாமல் சோனுசூட் ஓட்டலாக மாற்றியதால், அவருக்கு பிரிகன் மும்பை மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பியது.
இதற்கு இடைக்கால தடை கேட்டு சோனுசூட் மும்பை சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் அவர் பம்பாய் உயர்நீதிமன்றத்தில், முறையீடு செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது, சோனுசூட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சோனுசூட்டுக்கு மாநகராட்சி அனுப்பிய உத்தரவை செயல்படுத்த 10 வாரங்கள் அவகாசம் வேண்டும் என்றும், அதுவரை ஓட்டலை இடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் வாதாடினார். ஆனால் சோனுசூட் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
“ஏற்கனவே சோனுசூட்டுக்கு போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இனிமேல் சோனுசூட், உள்ளாட்சி நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி தீர்த்துக்கொள்ள வேண்டும்” என கூறி உள்ளது.
நீதிமன்ற உத்தரவையடுத்து, ஓட்டல் இடிக்கப்படாமல் இருக்க சோனுசூட், மாநகராட்சியை அணுகுவார் என தெரிகிறது.
– பா. பாரதி