சென்னை:

சீன அதிபர் தமிழகத்திற்கு நாளை வர இருப்பதைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை அண்ணாசாலை அருகே உள்ள ரிச்சித் தெருவில் இளம்பெண் ஒருவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த வெடிகுண்டு சம்பவத்தையடுத்து, அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையின் பிரதான பகுதியான,  சிந்தாதிரிப்பேட்டையில் உள்ளது ரிச்சி தெரு. மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யப்படும் இடமான எங்கு எப்போதும் மக்கள் நெரிசல் காணப்படும். இங்கு இன்று மதியம், ஒரு பெண்ணை சிலர்  சுற்றி வளைத்து தாக்கினர். அப்போது ஒருவர் அந்த பெண்ணை அரிவாளால் வெட்டியதுடன், நாட்டு வெடிகுண்டையும் வீசினார்.

இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உஷார் ஆனதைத் தொடர்ந்து, அந்த மர்ம நபர்கள் அங்கி ருந்து தப்பி ஓடிவிட்டனர். பட்டப்பகலில் மக்கள் கூட்டத்தில் நடைபெற்ற இந்த கொலைவெறித் தாக்குதலால் பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், காயமடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், தாக்கப்பட்ட பெண், அந்த பகுதியைச்சேர்ந்த ரவுடி ஒருவரின் 3வது மனைவி என்பதும், அவர்களது எதிர்கோஷ்டி அந்த பெண்ணை கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.