டெல்லி
நேற்று டெல்லி – விசாகப்பட்டினம் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு மர்ம நபர்கள் டெல்லியில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். டெல்லி காவல்துறைக்கு இது தொடர்பாக தகவல் கிடைத்ததால், அவர்கள் உடனடியாக விசாகப்பட்டினம் விமான நிலைய அதிகாரிகளிடம் தகவலை கூறி எச்சரிக்கை செய்தனர்.
நேற்று டெல்லியில் இருந்து சென்ற விமானத்தில் 107 பயணிகள் இருந்தனர். விமானம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன், அனைத்து பயணிகளையும் உடனடியாக வெளியேற்றிவிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை தீவிரமாக சோதனை செய்தனர்.
சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.