சென்னை: தமிழ்நாடு  தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, அங்கு  தீவிர சோதனை  நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் அதிகரித்து உள்ளது. கடந்த சில மாதங்களாக பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது அரசு அலுவலகங்களுக்கு வரத்தொடங்கி உள்ளது. ஏற்கனவே சில முறை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஆளுநர் மாளிகை மற்றும் தலைமைச் செயலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம்,  சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரிந்தது.

இந்த நிலையில், இன்று மர்ம நபர்கள் தொலைபேசி மூலமாக  தலைமைச்செயலகத்துக்கும், ஆளுநர் மாளிகைக்கும்  வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, தலைமைச் செயலக  ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.

இதையடுத்து அங்கு குவிக்கப்பட்ட போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன்   தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையிலும்,   காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.