டில்லி:

பாரதியஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் விரைந்து வந்து சோதனை நடத்தினர்.

விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் வந்த தொலைபேசி எண் மைசூரில் இருந்து வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

பாரதியஜனதா கட்சியின் தலைமை அலுவலகம், 6 ஏ, தீன்தயாள் உபாத்யா மார்க், புதுடில்லி என்ற முகவரியில் உள்ளது. இங்குள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர்  தொலைபேசி மூலம் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக  மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து உடடினயாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர்  அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து அது புரளி என தெரிய வந்தது.

சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்பை டெல்லி காவல் துறையினர்  ஆய்வு செய்ததில், மைசூரிலிருந்து அழைப்பு விடுத்தது கண்டறியப்பட்டுள்ளது.