காபூல்
ஆப்கான் தலைநகர் காபூலில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 19 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து செல்வதாக அறிவித்த பிறகு தாலிபான்கள் சிறிது சிறிதாக நாட்டை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கு எதிராக ஐ எஸ் உள்ளிட்ட பல அமைப்பினர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மதியம் சுமார் 2 மணி அளவில் ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இரு குண்டுகள் வெடித்துள்ளன. அத்துடன் இந்த குண்டு வெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, இதில் சுமார் 19 பேர் உயிர் இழந்துள்ளனர். சுமார் 50 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரில் சிலர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. எனவே உயிர் இழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று நடந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலை ஐ எஸ் அமைப்பின் ஹரோசென் பிரிவினர் நடத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.