மங்களூரு:
‘‘மோடிக்கு எதிரான விமர்சனத்தை தொடங்கியது முதல் பாலிவுட்டில் இருந்து எனக்கு எந்த பட வாய்ப்பும் வரவில்லை’’ என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜ அரசுக்கு எதிராக நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்து வருகிறார். மேலும், தற்போது பாஜக.வுக்கு எதிராக கர்நாடகா தேர்தலில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் ‘தி பிரின்ட்’ இதழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ‘‘கர்நாடகா பத்திரிக்கையாளர் கவுரி சங்கர் கொலை செய்யப்பட்ட சமயத்தில் பிரதமர் மவுனம் காக்கிறார் என்று நான் தெரிவித்தேன். அப்போது முதல் இந்தி பட உலகமான பாலிவுட்டில் இருந்து எனக்கு எந்தவிதமான பட வாய்ப்பும் வரவில்லை. தென்னக திரைத்துரையில் எவ்வித பிரச்னையும் இல்லை. இதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. என்னிடம் போதுமான அளவில் பணம் உள்ளது.
கவுரியின் மரணம் என்னை மிகவும் கவலை அடைய செயதுவிட்டது. அவர் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் திடீரென அமைதியாகிவிட்டது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. அவரை தனித்து விட்டுவிட்டோமா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. எனது வாயை அடக்க பல முயற்சிகள் நட ந்தது. இதற்காக எனது நடத்தையை களங்கப்படுத்தினர்’’ என்றார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘எனது பணியை நிறுத்திவிடுவோம் என்று மிரட்டல் வந்தது. இதை பாஜக தான் செய்தது. நாம் அமித்ஷாவை பார்த்து ஏன் பயப்பட வேண்டும்?. அவரிடம் தலைவர் பதவிக்கான தகுதி என்ன இருக்கிறது?. நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏதேனும் ஒரு ஆலோனை கொடுத்துள்ளாரா? என்பதை கூற வேண்டும். அவரது சானக்ய தனம் தான் அவருக்கு பலம். இதன் மூலம் அரசுகளை கவிழ்க்கலாம். தேர்தலில் வெற்றி பெறலாம்.
கருப்பு பணம் ஒழிப்பு, 2 கோடி பேருக்கு வேலை போன்ற வாக்குறுதிகளை மோடி அளித்தார். மூன்றரை ஆண்டுகள் கழிந்த பின்னரும் இதில் எதுவும் செய்யவில்லை. நேரு, திப்புசுல்தான் குறித்து தான் பேசுகின்றனர். 2 தலைமுறைக்கு முன்னர் செய்த விஷயங்கள் இப்போது எதற்கு?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரகாஷ் ராஷ் தொடர்ந்து கூறுகையில்,‘‘ எவ்வளவு கருப்பு பணம் திரும்பி வந்தது என்று கூறவில்லை. அவர்களுக்கு எதிராக பேசினால் இந்து விரோதி என்கின்றனர். அதனால் நம்மை பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடுவார்களாம். ஏன் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும்?. சுற்றுலா தளத்தில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலுக்கு அனுப்பி வையுங்களேன். அவர்களது மனதில் இஸ்லாம் தவறான மதம் என்ற கண்ணோட்டம் உருவாகிவிட்டதால் தான் பாகிஸ்தானுக்கு அனுப்புவோம் என்று கூறுகின்றனர்.
ஒரு மத கொள்கையை கடைபிடிக்கும் பாகிஸ்தான் வறுமையில் வாடுகிறது. இந்த நிலை நம் நாட்டிற்கு வேண்டுமா?. எம்எல்ஏ, எம்பி ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தான் நான் அரசியலில் ஈடுபடுகிறேன். இது ஒரு மாதமோ? அல்லது 2 மாதமோ? கிடையாது. ஒரே இரவில் மாற்றத்தை கொண்டு வர முடியாது. நான் கட்சி தொங்கும் எண்ணமும் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.