மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை பிரபல நடிகை கங்கனா ரனாவத், தமது சகோதரியுடன் சென்று சந்தித்து பேசினர்.
அண்மையில், நடிகை கங்கனா ரனாவத் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கருத்து தெரிவித்து இருந்தார். இதையடுத்து அவருக்கும், மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனாவுக்கும் மோதல் எழுந்தது.
இதையடுத்து பாந்திரா பாலிஹில்லில் உள்ள கங்கனா பங்களாவில் சட்ட விரோதமாக புதுப்பிக்கும் பணிகள் நடந்ததாக கூறி மும்பை மாநகராட்சி இடித்து தள்ளியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நடிகை கங்கனா போதை பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்த மும்பை போலீசாருக்கு மாநில அரசு உத்தரவிட்டது.
இந் நிலையில், கங்கனா ரனாவத், தமது சகோதரி ரங்கோலியுடன் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை ராஜ் பவனில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கங்கனா ரனாவத், தமக்கு நிகழ்ந்த அநியாயத்தை ஆளுநர் விளக்கி கூறினேன் என்றார்.
தமக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாகவும், சொந்த மகளை போலவே ஆளுநர் தமது குறைகளை கேட்டறிந்தது எனது அதிர்ஷ்டம் என்றும் கங்கனா ரனாவத் தெரிவித்தார்.