சுக்ரே

பொலிவியாவில் ஆட்சியைக் கலைக்க முயன்ற ராணுவ தளபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் அதிபர் லூயிஸ் ஆர்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஜனநாயக அரசாங்கத்தை கவிழ்க்க ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா சதித்திட்டம் தீட்டினார்.

தளபதியின் உத்தரவின்பேரில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதிபர் மாளிகை, நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை முற்றுகையிட்டு கவச வாகனம் மூலம் நாடாளுமன்ற கதவுகளை உடைக்கும் முயற்சி நடைபெற்றது.

ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா இது குறித்து,

“அதிபர் லூயிஸ் ஆர்சை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம் நாட்டில் உண்மையான ஜனநாயகம் மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் ஜீனைன் அனெஸ் உள்பட பல அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்”

என்று தெரிவித்தார்

கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றபோது நடந்த வன்முறையில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். சதித்திட்டதுக்கு மூளையாக செயல்பட்ட ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா கைது செய்யப்பட்டார். அவரது படைகள் பின்வாங்கியதால் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டது

பொலிவியால் நடந்தஇந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு அமெரிக்கா பிரேசில் உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.