ம்ஸ்டர்டாம்

டந்த 2009 ஆம் வருடம் ஆம்ஸ்டர்டாம் அருகே நடந்த போயிங் 737 விமான விபத்து குறித்த புதிய விசாரணைக்கு ஒத்துழைக்க போயிங் விமான நிறுவனம் மறுத்துள்ளது.

போயிங் 737 ரக விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வந்ததை அடுத்துப் பல விமான நிறுவனங்கள் அந்த விமான பயன்பாட்டுக்குத் தடை விதித்திருந்தன.  இந்த விபத்துக்களுக்கு முக்கிய காரணம் இந்த போயிங் 737 ரக விமானங்களில் காணப்படும் பாதுகாப்பு அம்சங்கள் குறைவு எனக் குற்றம் சாட்டப்பட்டது.  இந்த விமான விபத்து கடந்த 2009 ஆம் அண்டு நெதர்லாந்து தலை நகர் ஆம்ஸ்டர்டாமில் முதலில் நடந்தது.

இதைத் தொடர்ந்து மேலும் இரு விமான விபத்துக்கள் நடந்தன.   நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் குழு இந்த விமான விபத்துக்கு போயிங் 737 ரக விமான பாதுகாப்புக் குறைவு காரணமாக இருக்கலாம் என்னும் அடிப்படையில் புதிய விசாரணை ஒன்றைத் தொடங்கியது.  இந்த விசாரணைக்கு ஆஜராக போயிங் நிறுவனம் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

நேற்று இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க போயிங் விமான நிறுவனம் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அலுவலர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.   முந்தைய விசாரணையில்  போது தெரிவிக்கப்பட்ட பல விளக்கங்களை புதிய விசாரணைக் குழு நீக்கி விட்டதாக  அமெரிக்க பாதுகாப்பு  அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும் போயிங் நிறுவனமும் தனது விமானங்களில் எவ்வித பாதுகாப்பு விதி மீறலும்  செய்யப்படவில்லை என பதில் அளித்துள்ளது.

இது குறித்து நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பேடர்னோட், ”போயிங் விமானங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன சமீபத்தில் நடந்த விபத்தில் 346  பேர் மரணம் அடைந்துள்ளது வரலாற்றில் மிகப் பெரிய விமான விபத்து ஆகும்.  எனவே இந்த விமானங்களில் பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப் படவில்லை என்பதும் அதை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளும் வலியுறுத்தவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

இதற்கு விமான நிறுவனம் பதில் அளிக்க வேண்டும்.  ஆனால் போயிங் தன்னையே ஒரு நீதிபதியாகக் கருதிச் செயல்பட்டு வருகிறது.   கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருப்பது இந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த எவ்விதத்திலும் உதவாது. ” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை குறித்து “நெதர்லாந்து பாதுகாப்பு ஆணையம் கடந்த 2010 ஆம் ஆண்டு இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் நிறுவனம் குறித்த விமர்சனங்களை வைத்திருந்த போதிலும் முக்கியமாக இந்த விபத்துக்கு விமான ஓட்டிகளின் அஜாக்கிரதையே காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.   விமானம் தரை இறங்கும் போது அதன் வேகத்தை திடீரென குறைத்ததும் ஒரு காரணம் எனக் கூறப்பட்டிருந்தது.

ஆனால் பிறகு அவ்வாறு வேகம் திடீரென குறைந்தது விமானத்தில் பொருத்தப்பட்டுந்த சென்சார் தவறு எனத் தெரிய வந்தது.  ஆயினும் போயிங் விமான நிறுவனம் முதலில் விசாரணை நடந்த போது அறிவிக்கப்பட்டதையே பின்பற்ற வேண்டும் என நினைகிறது” என்று மற்றொரு விசாரணைக் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.