அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள மவுயில் (Maui) தரையிறங்கிய யுனைடெட் ஏர்லைன்ஸ் ஜெட்லைனர் (United Airlines jetliner) விமானத்தின் சக்கரப் பகுதியல் இறந்தவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிகாகோ ஓ ஹேர் (Chicago O’Hare) சர்வதேச விமான நிலையத்தில் இருந்து United Flight 202 விமானம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கஹுலுய் (Kahului) விமான நிலையத்தில் தரையிறங்கிய போதுஇந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விமானத்தின் சக்கரப் பகுதியில் உள்ள தரையிறங்கும் கியரை (gear) கொண்டிருக்கும் பெட்டிகளில் ஒன்றில் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாக விமான நிறுவனத்தின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சக்கர மற்றும் விமானங்களின் சரக்குகள் பகுதியில் 50 முதல் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையையும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையையும் கொண்டிருக்கும்.

இந்த நிலையில் சக்கர பகுதியில் சிக்கி உயிரிழந்த நபர் குறித்த மற்ற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

விமானத்தின் வெளியிலிருந்துதான் அதன் சக்கரப் பகுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் இறந்த கிடந்த நபர் எப்போது மற்றும் எப்படி அதில் நுழைந்தார் என்பது குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து வேறு எந்த தகவலையும் வெளியிட அமெரிக்க அரசின் விமானப் போக்குவரத்து நிர்வாகம் மறுத்துள்ளது.