மும்பை
அடுத்த 72 மணி நேரத்துக்கு மும்பையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என மும்பை மாநகராட்சி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி மும்பை நகரத்தில் ஒரே நாளில் 300மிமீ மழை பெய்து வெள்ளக்காடானது. அதனல் லட்சக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் தவித்தனர். அப்போது மும்பை மாநகராட்சி மக்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் அளிக்காததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
தற்போது கொலாபா வானிலை ஆராய்ச்சி மையம் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. குறிப்பாக மும்பையிலும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 72 மணி நேரத்துக்கு விடாது கனமழை பெய்யக்கூடும் என கூறி உள்ளது. இதனால் மும்பை மாநகராட்சி மும்பை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நகரில் வெள்ளம் வரும் அபாயம் உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மேடான பகுதிக்கு உடனே செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மும்பை மக்கள் மாநகராட்சி முன்கூட்டியே பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். மும்பை மாநகராட்சி நேற்று விடுத்த எச்சரிக்கை அறிவிப்பில் விடுமுறை பற்றி எந்த ஒரு பரிந்துரையும் செய்யாதது மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
நேற்று பெய்த மழையில் பைகுல்லா பகுதியில் உள்ள ஒரு மூன்று மாடி கட்டிடத்தில் இடிபாடுகள் ஏற்பட்டது. அந்தக் கட்டிடத்தில் சில குடும்பங்களும் இரு நகைக்கடைகளும் இருந்தன. அவர்கள் உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அனைவரும் நலமாக உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடம் மகாராஷ்டிரா விட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமானது.