சென்னை
பார்வையற்றோருக்கான பாடப் புத்தகங்களின் விலை சாதாரணப் புத்தகங்களின் விலையை விட 30% அதிகமாக உள்ளது.
பார்வையற்றவர்கள் படிக்க வசதியாக பிரெய்ல் முறையில் புத்தகங்கள் அச்சடிக்கப் படுகின்றன. இதில் எழுத்துக்களுக்கு பதில் மேலெழுந்துள்ள புள்ளிகள் இருக்கும். ஒவ்வொரு எழுத்துக்கும் விதம் விதமாக புள்ளிகள் இருப்பதால் பார்வையற்றோர் அதைத் தடவிப் பார்த்து படித்து வருகிறார்கள். பார்வையற்றோருக்கான பாடப் புத்தகங்களும் இவ்வாறே அச்சடிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
பிரெய்ல் முறையில் அச்சிடப்படும் புத்தகங்கள் சாதாரண புத்தகங்களை விட 30 % விலை அதிகமாக உள்ளது. அது மட்டுமின்றி போதுமான அளவு எண்ணிக்கையில் இந்த புத்தகங்கள் அச்சடிக்கப்படுவதில்லை. இதனால் பல பார்வையற்ற மாணவர்கள் துயருற்று வருகின்றனர்.
இது குறித்து சென்னைக் கல்லூரி ஒன்றில் சரித்திர பட்டப் படிப்பு பயிலும் பார்வையற்ற மாணவி வெள்ளையம்மாள், “புத்தகங்களின் விலை அதிகமாக உள்ளதால் என்னால் வாங்க முடிவதில்லை. என்னுடன் படிக்கும் பார்வைத் திறன் உள்ள மாணவிகளிடம் பாடப் புத்தகத்தை படிக்கச் சொல்லி அதை நான் குரல் பதிவாக பதிந்துக் கொள்வேன்.
பிறகு அதை மீண்டும் மீண்டும் கேட்டு பாடங்களைப் புரிந்துக் கொள்வேன். விலை 30% அதிகம் என சொல்லப்பட்டாலும் பல புத்தகங்கள் 50-60 % அதிக விலையில் உள்ளன. பெரும்பாலான புத்தகங்கள் பிரெய்ல் முறையில் அச்சிடப் படுவதும் இல்லை” எனத் தெரிவிக்கிறார்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர், “அரசு பார்வையற்றோர் கல்விக்க்கு உதவிகள் செய்வதாக சொல்லி வருகிறது. ஆனால் தேவையான அளவு பாடப்புத்தகங்கள் கிடையாது. இருக்கும் புத்தகங்களும் அதிக விலையில் உள்ளது. இதற்கு அரசுதான் ஆவன செய்ய வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.