கேரள மாநில பாரதீய ஜனதாவின் முன்னாள் தலைவரும், மராட்டியத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவருமான வி.முரளிதரனை மத்திய அமைச்சரவையில் சேர்த்துள்ளதன் மூலம், பாரதீய ஜனதாவின் திட்டம் என்ன? என்று கேள்வியெழுப்புகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
பெரிய போராட்டத்தின் இடையே, யாரும் எதிர்பார்க்காத வகையில் 18 இடங்களை அள்ளிய மேற்கு வங்கத்திற்குகூட அமைச்சரவையில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிலையில், ஒரு தொகுதியைக்கூட வெல்லாத சிறிய மாநிலமான கேரளத்திற்கு, அமைச்சரவையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளதே பலரின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதற்கு காரணம்.
சபரிமலை விவகாரத்தை தனது ஸ்டைலில் மிகப்பெரிய மதப்பிரச்சினையாக்கி, அதன்மூலம் நாடாளுமன்ற தேர்தலில் குளிர்காய நினைத்தது பாரதீய ஜனதா. ஆனால், கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு, பிரச்சினையில் ஈடுபட்ட பாரதீய ஜனதாவினரை கடுமையாக ஒடுக்கியது. ஆனாலும், இந்த தேர்தலில் இடதுசாரி கூட்டணி ஒரேயொரு இடத்தில் மட்டுமே வென்றது.
அதேசமயம், சபரிமலை விவகாரத்தால் தங்களுக்கு தேர்தலில் நல்ல ஆதாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த பாரதீய ஜனதாவுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இத்தேர்தலில் அக்கட்சி ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. அதேசமயம், அக்கட்சி கிட்டத்தட்ட 16% வாக்குகளைப் பெற்றுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
மாறாக, காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களில் பெரும் வெற்றிபெற்றது. நடந்த முடிந்த தேர்தலில், தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில்தான் பாரதீய ஜனதா ஒரு இடத்தைக்கூட வெல்லவில்லை. ஆனால், அப்படியிருக்கையில், கேரளத்திற்கு மட்டும் அமைச்சரவை பிரதிநிதித்துவம் தருவதில் ஏதோ ஒரு பெரிய எதிர்கால திட்டம் இருப்பதாகவே பேசப்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களை இப்போது கிடப்பில் போட்டுவிட்டு, கேரளாவை கையில் எடுப்போம் என்று பாரதீய ஜனதா முடிவெடுத்துவிட்டதா? என்று கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
ஏனெனில், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஒப்பிடும்போது, கேரளாவில்தான் அக்கட்சிக்கு வாக்கு சதவீதம் அதிகம். கேரளா சிறிய மாநிலமும்கூட. எனவே, முதலில் கேரளாவை கையில் எடுத்து கவனம் செலுத்தவே, முரளிதரனை மத்திய அமைச்சரவையில் சேர்த்து காய்களை நகர்த்தவுள்ளது பாரதீய ஜனதா என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
தென்மாநிலங்களிலேயே, கர்நாடகாவில் மிகவும் செல்வாக்கான கட்சியாக மாறிவிட்டது பாரதீய ஜனதா. தெலுங்கானாவிலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் 4 இடங்களைப் பிடித்துவிட்டது.
அக்கட்சிக்கு தடங்கலாக இருப்பது இதர 3 மாநிலங்கள்தான். எனவே, அவற்றுள் முதலில் புத்திசாலிகள் மாநிலம் என்று விளம்பரப்படுத்தப்படும் கேரளாவை கையில் எடுத்துள்ளது அக்கட்சி.
– மதுரை மாயாண்டி