டில்லி:

மத்திய பாஜக அரசை கூட்டணி கட்சிகள் மிரட்டும் நிகழ்வுகள் பரவ தொடங்கியுள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நாடாளுமன்றத்தை முடக்கிய தெலுங்கு தேச கட்சி, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளது. ஏற்கனவே மாநில அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 2 பாஜக அமைச்சர்கள் வெளியேறிவிட்டனர்.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவை வழிக்கு கொண்டு வர பிரதமர் மோடியே நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்துள்ளார். தெலுங்கு தேசத்தை தொடர்ந்து பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளமும் மிரட்டத் தொடங்கியுள்ளது. பீகார் மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்,.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளாக 2 இலக்கு வளர்ச்சியை அடைந்தபோது தேசிய சராசரியில் பீகார் பின் தங்கியே இருக்கிறது. வறுமை கோடு, தனி நபர் வருமானம், தொழில் துறை, சமூக, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பின்னடைவு நீடிக்கிறது’’ என்றார். கடந்த ஜூலை மாதம் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோதே நிதிஷ்குமார் சிறப்பு அந்தஸ்து கோரிக்கை வலியறத்தியிருந்தார்.

இது குறித்து மத்திய அமைச்சரும், பீகார் மாநிலத்தை சேர்ந்தவருமான ராம்விலாஸ் பஸ்வான் கூறுகையில், ‘‘பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நிதிஷ்குமார் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். எனினும் அதிகம் பயன்பெறும் வகையில் சிறப்பு தொகுப்புகள் அடங்கிய திட்டம் பீகாருக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. சிறப்பு அந்தஸ்துக்கு நிகரான பலன்களை இதன் மூலம் அடைய முடியும்’’ என்றார்.

இந்நிலையில் நேற்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில், ‘‘ஆந்திராவுக்கும் நிதி அளிப்பதில் மத்திய அரசுக்கு மகிழ்ச்சி தான். ஆனால் சிறப்பு அந்தஸ்து வழங்குவது சாத்தியமில்லை’’ என்று தெரிவித்தார்.