கொல்கத்தா:
போதைபொருள் கடத்தலில் ஈடுபட்ட பாஜக இளைஞர் பிரிவுத் தலைவர் பமீலா கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (பி.ஜே.வி.எம்) மாநில செயலாளர் கோஸ்வாமியின் கைப்பை மற்றும் காரின் பிற பகுதிகளில் சுமார் 100 கிராம் அளவு கொண்ட கோக்கேன் போதைபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கோஸ்வாமி, அவரது நண்பர் பிரபீர் குமார் டே ஆகிய இருவரும் கைது செய்யப்டடுள்ளனர் கூறியுள்ளனர்.
பாஜக இளைஞர் பிரிவுத் தலைவர் பமீலா கோஸ்வாமி போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, எட்டு வாகனங்களில் வந்த காவல்துறையை சேர்ந்த குழுவினர், கோஸ்வாமியின் காரைச் சுற்றி வளைத்து அவரை கைது செய்துள்ளனர்.
அதே வாகனத்திற்குள் இருந்த பாஜக இளைஞர் பிரிவின் தலைவரின் பாதுகாப்புக் காவலரும் கைது செய்யப்பட்டார் என்று தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரி, இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவர் ஏதேனும் போதைப்பொருள் மோசடியில் ஈடுபட்டாரா என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்” என்றும் கூறியுள்ளார்.
கோஸ்வாமி மீது திட்டமிட்டு குற்றம்சாட்டுவதாக சந்தேகிப்பதாக தெரிவித்துள்ள பாஜக எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி, அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், சட்டம் அதன் கடமையை செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.