ரே பரேலி
பாஜக பலவித தந்திரங்கள் செய்து மக்களவை தேர்தலில் வென்றுள்ளதாக ஐக்கிய முன்னணி கூட்டணி தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று அரசு அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியால் வெறும் 53 இடங்களில் மட்டும் வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாம் போட்டியிட்ட இரு தொகுதிகளில் அமேதியில் தோல்வி அடைந்தார். உ.பி. மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா காந்தி ஒருவர் மட்டும் ரே பரேலி தொகுதியில் வெற்றி பெற்றார்.
ரே பரேலி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க சோனியா காந்தி நேற்று முன் தினம் சென்றார். அப்போது அவருடன் காங்கிரச் செயலரும் சோனியாவின் மகளுமான பிரியாங்கா காந்தியும் உடன் சென்றார். தேர்தல் வெற்றிக்கு பிறகு சோனியா காந்தி தனது தொகுதிக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். அங்கு அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
கூட்டத்தில் சோனியா காந்தி, “தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக அனைத்து தந்திரங்களையும் மேற்கொண்டது. பலவித தந்திரங்களால் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அவற்றில் எவ்வளவு நியாயமானவை எவ்வளவு அநியாயமானவை என்பதை நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அறிவார்கள்.
இந்த தேர்தல் வெற்றிக்காக பல மதிப்பற்ற செயல்களை அந்த கட்சி நடத்தி உள்ளது.
இவ்வாறாக பாஜக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது நாட்டுக்கு மிகவும் துரதிருஷ்டவசமாகும். தேர்தல் நடைமுறையில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இத்தைகய சந்தேகங்கள் கடந்த சில வருடங்களாகவே அனைத்து மக்கள் மனதிலும் உள்ளன.” என உரை ஆற்றியுள்ளார்.