ராய்ப்பூர்
கேரளாவில் பா ஜ க மற்றும் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் மீது வன்முறை தொடர்ந்தால் வன்முறையாளர்களை வீடு புகுந்து அடிப்போம் என ஒரு பா ஜ க பெண் பிரமுகர் கூறியுள்ளார்.
பா ஜ கவின் தேசிய பொதுச்செயலாளர் சரோஜ் பாண்டே ஆவார். இவர் சத்தீஸ்கர் மாநில துர்க் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். நேற்று ராய்ப்பூரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு சரோஜ் பாண்டே பேசினார். அவர் தனது உரையில் கேரள அரசையும், மேற்கு வங்க அரசையும் கடுமையாக சாடினார்.
அவர் தனது உரையில், “நாடு முழுவதும் தற்போது எங்கள் கட்சிதான் பலம் பெற்று விளங்குகிறது. பா ஜ கவில் சுமார் 11 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். நாங்கள் நினைத்தால் எந்த மாநில அரசையும் கலைக்க முடியும், பா ஜ க மற்றும் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் மீது வன்முறையை அவிழ்த்து விடும் மேற்கு வங்கம் மற்றும் கேரளா அரசுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். வன்முறையை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.
நான் கேரள அரசுக்கு சொல்லிக் கொள்கிறேன். இனியும் பா ஜ க மீதும் ஆர் எஸ் எஸ் மீதும் வன்முறை தொடர்ந்தால் எங்கள் தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். வன்முறையாளர்களின் வீட்டுக்குள் புகுந்து அவர்களை அடித்து நொறுக்குவோம். அவர்களுடைய விழிகளையே நோண்டி விடுவோம் ஆனால் நாங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ளதால் அது போல செய்யவில்லை” என தெரிவித்தார்.
கேரள மாநிலத்தில் பா ஜ க மீது ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி வன்முறை தாக்குதல்கள நடத்துவதாகக் கூறி ஜன் ரக்ஷா யாத்திரை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.