திருச்சி

பாஜக பெண் பிரமுகர் சவுதாமணி தனது வலைத்தளத்தில் பள்ளி மாணவிகள் மது அருந்தும் வீடியோவை வெளியிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் திருச்சி மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு வருண்குமாரிடம் அளித்த புகாரில்,

”கடந்த 4-ந் தேதி சவுதாமணி என்பவர் அவரது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “மனது வலிக்கிறது. வருங்கால இந்தியாவின் தூண்கள் இப்படி அலங்கோலப்பட்டு கிடக்கிறது. திராவிட மாடல் இந்த வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தைச் சிதைக்கும் கொடுமைகளைத் தானே செய்கிறது. மது… கஞ்சா…. திராவிட ஆட்சி தமிழகத்திற்கு சாபக்கேடு” என்று பதிவிட்டு, அதனுடன் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். 

அந்த வீடியோவில் 15 வயது மதிக்கத்தக்க 3 பள்ளி மாணவிகள் சீருடையுடன் கையில் பாட்டிலில் மதுபோன்ற பானத்தை வைத்துக் குடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவை பார்க்கும்போது, யாரோ மேற்படி திரவத்தைக் கொடுத்துக் குடிக்க சொல்லி வீடியோ எடுத்து, அந்த பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாகத் தெரிகிறது. 

இப்படி சமுதாயத்தை சீர் கெடுக்கும் விதமாகவும், அரசுக்கும், அரசுப் பள்ளிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடும், பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் ஏதோ உள்நோக்கத்துடன் மேற்படி வீடியோவை பரப்பிய சவுதாமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ” 

என்று கூறியிருந்தனர்.

காவல்துறை விசாரணையில் சவுதாமணி பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளராகவும் இருப்பது தெரியவந்தது. சவுதாமணி மீது, கலகம் செய்வதற்கு தூண்டுதல், பொது அமைதியைக் குலைத்தல், வதந்தி பரப்புதல், குழந்தைகளுக்கு மதுபானம் வழங்குதல், சமூகவலைத்தளத்தில் அவதூறு பரப்பும் வகையில் குழந்தைகளின் அடையாளங்களை வெளியிடுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

நேற்று காலை சென்னையில் அவரை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்து நேற்று மாலை திருச்சி நீதிமன்றத்தில் சவுதாமணியை முன்னிறுத்தினர். ஆனால்  சவுதாமணி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். நீதிபதி முதல் தகவல் அறிக்கையைப் படித்து பார்த்த பின்பு சவுதாமணி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை என்று கூறியதுடன், அவரை நீதிமன்ற காவலுக்கு (சிறைக்கு) அனுப்ப மறுத்து, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி அவரை உடனடியாக விடுவித்தார்.