கொல்கத்தா
மேற்கு வங்க இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதையொட்டி வன்முறை நடைபெறாமல் தடுக்க பாஜக பெண் வேட்பாளர் உயர்நீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மேற்கு வங்க சட்டப்பேரவை 8 கட்டங்களாக நடந்தது. இதில் 213 இடங்களில் வெற்றி பெற்ற திருணாமுல் கட்சி மம்தா பானர்ஜி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி பாஜகவிடம் தோல்வி அடைந்தார். முதல்வராகப் பொறுப்பேற்று 6 மாதங்களுக்குள் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையில் காலியான தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரை எதிர்த்து பாஜக பெண் வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் ஆகியோர் போட்டி இடுகின்றனர். இங்குக் கடந்த 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் இன்றே வெளியாக உள்ளது.
இந்நிலையில் பாஜக பெண் வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாவதால் வன்முறைச் சம்பவங்கள் நடக்க வாய்ப்புக்கள் உள்ள எனவும் அதைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர், “முன்பு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கருதி, ஒரு வேட்பாளராகச் சட்ட அமலாக்கத் துறைகள் முன்னெச்சரிக்கையாக அதிகபட்ச தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
மாநிலத்தில் எந்த உயிரும் பறிபோகக் கூடாது, எந்த பெண்ணும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகக் கூடாது, யாரும் வீடில்லாதவர்களாக மாறிவிடக் கூடாது, தேர்தல் முடிவுகள் எவ்வாறாக இருப்பினும், நாம் வாழும் சூழல் மாறிவிடக்கூடாது, கலவரங்களைத் தடுக்க வேண்டும்! ” எனத் தெரிவித்துள்ளார்.