டில்லி:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதியஜனதா வெற்றி பெறும் என்று பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அமித்ஷா கூறியதாவது,
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமனற் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுடன் ஒன்றிணைந்தே தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.
மகராஷ்டிராவில் சிவசேனா கட்சி உடனான கூட்டணியைத் தொடரவே விரும்புகிறோம். கூட்டணியை விட்டு அக்கட்சியை வெளியேற்றும் எண்ணம் ஒருபோதும் இல்லை. ஆனால், சிவசேனா தனித்துப் போட்டியிட விரும்பி, கூட்டணியில் இருந்து வெளியேறினால் அதை எங்களால் தடுக்க இயலாது. அது, அக்கட்சியின் விருப்பம்.
உ.பி.யில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சியும் கூட்டணி அமைத்தால், அது பாஜகவுக்கு சவாலாக இருக்கக்கூடும் என்ற அமித்ஷா, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை அறிந்துதான் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக ஓரணியாக திரள முடிவு செய்துள்ளன என்றார்.
தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்றும் மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.