கொல்கத்தா
நள்ளிரவு நேரத்தில் மின்னணு வாக்கு இயந்திரங்களை இடமாற்றம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வ்ர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்
கொல்கத்தாவில் நேற்று முன் தினம் நடந்த பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் சாலைப் பேரணியில் நடந்த வன்முறையை ஒட்டி தேர்தல் ஆணையம் மேற்கு வங்க மாநிலத்தில் இன்றுடன் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது. இது மேற்கு வங்க முதல்வரும் திருணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது.
இன்று மந்திர் பஜாரில் நடந்த தேர்தல் பேரணியில் மம்தா, “நேற்று இரவு தேர்தல் ஆணையத்திடம் பாஜக அளித்த புகாரின்படி பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு பிறகு வேறு கூட்டம் நடத்த முடியாத படி ஆணையம் பிரசாரத்தை நிறுத்தி உள்ளது. பாஜகவின் சகோதரராக தேர்தல் ஆணையம் மாறி விட்டது. முதலில் தனித்துவம் வாயந்ததாக இருந்த தேர்தல் ஆணையத்தை பாஜக விலைக்கு வாங்கி விட்டது.
எனவே தேர்தல் ஆணையத்தின் ஆதரவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை இடமாற்றம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. அதனால் திருணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல் இருக்க வேண்டும். உணவுப் பொருட்கள், நீர் ஆகியவற்றை கையோடு வைத்திருக்க வேண்டும். நீங்கள் உணவு உண்ண செல்லும் போது இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்படலாம். ” என தெரிவித்துள்ளார்.