லக்னோ
இந்தியா டுடே பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பின்படி உத்திரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.
மக்களவையில் அதிக தொகுதிகள் கொண்ட மாநிலமாக உத்திரப் பிரதேசம் உள்ளது. எனவே இந்த மாநிலத்தில் வெற்றி பெறும் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2014 ஆம் வருட மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி இந்த மாநிலத்தில் உள்ள 80 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அது மட்டுமின்றி சென்ற மக்களவை தேர்தலில் பாஜக ராஜஸ்தானில் 25 இடங்களும் குஜராத்தில் 26 இடங்களும் மத்தியப் பிரதேசத்தில் 25 இடங்களும் சத்தீஸ்கரில் 10 இடங்களும் பெற்றது. தற்போது நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக ஆட்சியை இழந்துள்ளதால் இந்த மாநிலங்களில் செல்வாக்கு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதுள்ள நிலையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் மக்களவை தேர்தல் குறித்து இந்தியா டுடே பத்திரிகை ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணிக்கு இம்மாநிலத்தில் 53 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.
அத்துடன் இந்த கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால் பாஜகவின் நிலை இன்னும் மோசமாகும் எனவும் தெரிய வந்துள்ளது. பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால் கூட்டணிக்கு 75 இடங்களும் பாஜகவுக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
மீண்டும் பிரதமாரகும் கனவில் உள்ள மோடிக்கு இது மிகவும் பின்னடைவு எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.