டில்லி:

பாரதியஜனதா கட்சியின்  அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. இணையதளத்தை மீட்டெடுக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இன்றைய நவீன உலகில் பெரும்பாலான நிகழ்வுகள் இணையதளத்தை சுற்றியே நடைபெற்று வருகின்றன. அனைத்து வகையான பரிவர்த்தனைகளும் இணையதளங்கள் மூலமே நடத்தப் படுகிறது.

சாதாரண 10 ரூபாய் பொருட்கள் வாங்குவது முதல் லட்சக்கணக்கான  ரூபாய் மதிப்பிலான வணிகங்களும் இணைதளத்தின் வாயிலாகவே நடைபெற்று வருகின்றன. அதுபோல, இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மக்களை  கவரை அனைத்து தரப்பினரும் இணையதளங்கள் மூலமே தங்களை வளர்த்து வருகின்றனர்.

குறிப்பாக அரசியல் கட்சிகள், தங்களது கருத்துக்களை மக்களிடையே எளிதில் சென்றடைய இணையதளங்களையே நம்பி உள்ளன. மக்களிடையே தங்களது கருத்துக்களை திட்டமிட்டு பரப்பி மாற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றன. அதுபோல இணையதள திருட்டுக்களும் அதிகரித்து வருகின்றன.

சமீப காலமாக பாரதிய ஜனதா இணையதளத்தில், புல்வாமாக தாக்குதல், இந்திய விமானப் படையின் அதிரடி தாக்குதல் குறித்தும் அதிகமாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதை நாடாளுமன்ற தேர்தலுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள் பயன்படுத்தி வருவம் நிகழ்வுகளும் பதிவேற்றப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், பாஜக வின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bjp.org -ஐ ஹேக்கர்கள் (இணைய திருடர்கள்)  முடக்கி உள்ளனர். இதனால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே ஹேக்கர்களால் மத்திய அரசின் பல்வேறு துறைகள், தமிழக அரசின் இணைய தளம் உள்பட ஏராளமான இணையதளங்கள் முடக்கப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.