அகமதாபாத்
குஜராத் பல்கலைக்கழக கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் பாஜக சங்கம் தோல்வி அடைந்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் மாநிலத்தை மாற்றி அமைத்த புதிய சிற்பி என மோடியை பாஜகவினர் புகழ்ந்து வருகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் குஜராத் மாநிலத்தை முன்னேற்றியது போல் நாட்டை முன்னேற்றுவார் என பாஜகவினர் தெரிவித்து ஆட்சியைப் பிடித்தனர். அத்துடன் குஜராத்தில் இனி எல்லா தேர்தல்களிலும் பாஜக வெல்லும் எனக் கூறி வந்தனர்.
தற்போது மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் குறிப்பாக மாணவ சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அமித்ஷா அறிவித்துள்ள தேசிய குடிமக்கள் பட்டியல், மற்றும் பாஜக அரசின் மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த எதிர்ப்பு சமீபத்தில் நடந்து முடிந்துள்ள குஜராத் பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் நன்கு எதிரொலித்துள்ளன. ,இந்த தேர்தலில் பாஜக ஆதரவு பெற்ற சங்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மற்றும் காங்கிரஸின் நேஷனல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் ஆஃப் இந்தியா ஆகியவை போட்டியிட்டன.
இந்த தேர்தலில் 8 பதவிகளில் 6 பதவிகளை காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஸ்டூட்ண்ட்ஸ் யுனியன் ஆஃப் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இது குறித்த தகவலில் அந்த சங்கம் மோடியின் பிரித்தாளும் அரசியலை அவரது சொந்த மாநில மாணவர்களே புறக்கணித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.