மும்பை: சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதாக, 12 பாஜக எம்.எல்.ஏக்கள் ஓராண்டு இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு வெளியே பாஜக எம்எல்ஏக்கள் போட்டி சட்டமன்ற கூட்டத்தை கூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஜ்டிரா மாநில சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல்நாள் கூட்டத்தில், ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில், ஆளும் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபையின் மையப்பகுதியில் வந்தும், அப்போது சபையை நடத்தி வந்த துணைசபாநாயகரிடமும் மரியாதை குறைவாக நடந்துகொண்டனர்.
இதையடுத்து, அமளியில் ஈடுபட்டதாக 5 முன்னாள் அமைச்சர்கள் உள்பட 12 சட்டமன்ற உறுப்பினர்களை ஓராண்டு இடைநீக்கம் செய்து சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் உத்தரவிட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுவரை எந்தவொரு சபாநாயகரும் அறிவிக்காத வகையில் ஓராண்டு இடை நீக்கம் செய்யப்பட்டது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
சபாநாயகரை கண்டித்து, பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. நாக்பூரில் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்தது, அங்கு பாஜக தொண்டர்கள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் உருவ பொம்மைகளை எரித்தனர்.
பின்னர், மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 12 பாஜக எம்எல்ஏக்கள், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து இந்த விவகாரத்தில் தனது தலையீட்டை நேற்று கோரினர்.
இந்தநிலையில், இன்று காலை சட்டமன்றம் கூடியதும், 12 பாஜக எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்ததற்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் மும்பை சபைக்கு வெளியே ஒரு இணையான சட்டமன்ற கூட்டத்தை தொடங்கினர்.
பாஜகவின் இணையான அமர்வில் கட்சித் தலைவர் காளிதாஸ் கோலம்ப்கர் சபாநாயகராக இருப்பார் என்று மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பிரவீன் தரேகர் அறிவித்தார். கட்சியின் இணையான சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸும் பங்கேற்றார். இந்த போட்டி கூட்டத்தில் ஆளும் அரசுக்கு எதிராக எம்எல்ஏக்கள் பேசி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.