கொல்கத்தா

தேர்தல் பிரசாரத்துக்காக மேற்கு வங்கத்துக்கு வெளியூரில் இருந்து வந்த பாஜகவினர் கொரோனாவை பரப்பி விட்டு ஓடி விட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது.   இம்மாநிலத்தில் திருணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.   அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  அவ்வகையில் திருணாமுல் காங்கிரஸ் சார்பாக முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று மம்தா பானர்ஜி அம்மாநிலத்தின் வடக்குப்பக்கம் உள்ள ஜல்பாய்குரியில் பிரசாரம் செய்துள்ளார்.  அவர் திருணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீப் வர்மாவை ஆதரித்து பிரசாரம் செய்தார்.  பிரதீப்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளதால் அவரால் இந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

மம்தா பானர்ஜி தனது பிரசாரத்தில், “மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்திருந்தோம்.  ஆனால் தற்போது மீண்டும் கொரோனாபரவி யாருக்கு வேண்டுமானாலும் எப்போதும் தொற்று ஏற்படும் நிலை உள்ளது.   சென்ற முறை கொரோனா பரவல் ஏற்பட்ட போது நீங்கள் (பாஜகவினர்) எல்லாம் எங்கிருந்தீர்கள் எனத் தெரியவில்லை.

ஆனால் தற்போது தேர்தல் தேதிகள் அறிவித்ததும்.  வெளியூரில் இருந்து ஆட்களைக் கூட்டி வந்து மாநிலத்தில் கொரோனாவை பரப்பி விட்டு ஓடி விட்டீர்கள்.   இவ்வாறு போனவர்கள் போகட்டும்.  மக்களே நீங்கள் எங்களுக்கு வாக்களியுங்கள்.  சரியான நேரத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு செய்திருந்தால் தற்போது கொரோனா பரவல் இரண்டாம் அலை ஏற்பட்டிருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.