டில்லி

யோத்யா வழக்கு தீர்ப்புக்குப் பிறகு காசி மற்றும் மதுரா நில மீட்பு குறித்த போராட்டங்களை பாஜக தொடராது எனக் கூறப்படுகிறது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7  ஏக்கர் நில உரிமை கோரி நடந்த வழக்கில் மசூதி இடிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.   சர்ச்சைக்குரிய இடத்தை அரசுக்குச் சொந்தமானது என அறிவித்த அந்த தீர்ப்பில் மசூதி இருந்த இடத்தில் ஏற்கனவே கட்டிடம் இருந்ததாகும் ஆனால் அது இஸ்லாமியக் கட்டிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.   அதையொட்டி அரசு உடனடியாக கோவில் அமைக்கும்  குழுவை அமைத்து பணிகளத் தொடங்க உத்தரவு இடப்பட்டது.

காசியில் உள்ள விஸ்வநாதர் கோவில் மற்றும் மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவில் ஆகிய இடங்களிலும் கோவில் நிலத்தில் மசூதி அமைக்கப்பட்டிருப்பதாக வெகு நாட்களாக ஆர் எஸ் எஸ் மற்றும் இந்து அமைப்பினர் கூறி வருகின்றனர்.   பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கடந்த 90 களின் தொடக்கத்தில் இருந்தே, “அயோத்யா என்பது முன்னுரை மட்டுமே.  அடுத்ததாகக் காசி மற்றும் மதுரா வரிசையில் உள்ளது” எனத் தெரிவித்து வந்தனர்.

தற்போது அயோத்தி வழக்கில் கோவிலுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ளதால் அடுத்த இலக்கு மதுரா மற்றும் காசி நில மீட்பாக இருக்கும் என எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது.  மூத்த ஆர் எஸ் எஸ் தலைவர் ஒருவர், “தற்போது காசி மற்றும் மதுரா விவகாரங்கள் முக்கியமானது இல்லை. முதலில் நாம் ராமர் கோவில் கட்ட வேண்டும்.   அதற்கு ஒவ்வொரு இந்தியனின் ஒற்றுமையும் அவசியமாகும்.   கோவில் கட்டவே அதிக காலம் பிடிக்கும்.   சோமநாதர் கோவில் கட்ட சர்தார்  படேல் முடிவு செய்து 4 வருடங்களுக்குப் பிறகு பணி தொடங்கப்பட்டது. “ எனத் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், “ஆர் எஸ் எஸ் மனித வள முன்னேற்றத்தைத்  தவிர வேறு எந்த ஒரு விவகாரத்திலும் எவ்வித நடவடிக்கையிலும் கலந்துக் கொள்ளாது.   இந்த அயோத்தி விவகாரம் ஒரு சரித்திரப் பிழை என்பதால் இதில் ஆர் எஸ் எஸ் கலந்துக் கொண்டது.   இது ஒரு விதிவிலக்காகும்.  நாம் மீண்டும் மனித வள மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு சமுதாய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவோம்” எனக் கூறி உள்ளார்.   இதே கருத்துக்களை விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பாஜகவினர் எதிரொலித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.